தமிழறிஞர்களின் கருத்துகளை ஏற்ற இடங்களில் குறிப்பிடுகின்றார். அவற்றுள் சில பின்வருமாறு: “சதி சத்தமியைத் தொல்காப்பியர் வினைசெய் இடம் என்பர். பரிமேலழகர் வினை நிகழ்ச்சி என்பர்” (காரக-16). “வஞ்சரை அஞ்சப்படும் என்னும் குறளினும், கொள்ளப்படாது மறுப்ப அறிவில்லன் கூற்றுக்களே என்னும் திருக்கோவையாரினும் பதிமேலழகரும் போராசிரியரும் முதனிலையைப் பிரித்து எழுவாயாக்கி முடித்தலும் காண்க” (திங்ஙு-2). சந்தியக்கரம் சந்தியக்கரம் பற்றி இவர் பின்வருமாறு கூறுகின்றார்: “இனிச் சந்தியக்கரமாவது, அகர இகரம் ஏகாரம் ஆகும். அகர உகரம் ஓகாரம் ஆகும். இகார உகாரம் என்னும் இவற்றோடு ஆகாரம் ஐ ஒள ஆகலும் உரித்தே. இவ்வுரைச் சூத்திரங்களால் ஈரெழுத்தாகிய சந்தியக்கரம் என்றும் ஓரெழுத்தாகிய ஏகாக்கரம் என்றும் அறிக” (காரக-5) 14. ஐந்திலக்கண நூல்களும் உரைகளும் பழம்பெரும் இலக்கண நூலாகிய தொல்காப்பியம், எழுத்து சொல் பொருள் என்று மூன்று அதிகாரங்களில் தமிழ் இலக்கணத்தை ஆராய்கின்றது. பொருளதிகாரத்தில் கூறப்பட்ட இலக்கணங்கள் பிற்காலத்தில் பலவேறு வகையாகப் பிரிந்து தனி நூல்கள் தோன்றின. பொருள் இலக்கணம், அகம் புறம் யாப்பு அணி எனத் தனித் தனியாகப் பிரிந்தது. தொல்காப்பியர் பொருளதிகாரத்தில் கூறியுள்ள அகத்திணையியல், களவியல் கற்பியல் பொருளியல் ஆகியவை பிற்காலத்தில் அகப்பொருள் இலக்கணம் ஆயின. புறத்திணை இயல் புறப்பொருள் இலக்கணமாயிற்று. உவம இயல், அணி இலக்கணமாயிற்று. செய்யுளியல், யாப்பிலக்கணமாக வடிவம் கொண்டது. மெய்ப்பாட்டியல் வளர்ச்சியின்றி, போதிய கருத்து விளக்கமின்றி அணி நூலில் அடைக்கலம் புகுந்தது. மரபியல் மறக்கப்பட்டது. நிகண்டு நூல்கள் மரபியல் கூறும் சில செய்தியைச் சேர்த்துக் கொண்டன. தொல்காப்பியர் கூறிய எழுத்து சொல் பொருள் |