பக்கம் எண் :

உரையாசிரியர்கள்648

என்ற மூவகை இலக்கணம் காலப்போக்கில் இவ்வாறு ஐவகை
இலக்கணமாயின.

     ஐந்திலக்கணப் புலமை பெறுவதைப் புலவர்கள் பெரும் பேறாகக்
கருதினர். குமரகுருரர்,

    எழுத்து முதலாம்ஐந்து இலக்கணம் தோய்ந்து
    பழுத்த தமிழ்ப்புலமை பாவித்து-ஒழுக்கமுடன்
    கடிஏற்கும் பூங்கமலக் கால்காட்டி ஆட்கொண்டு
    அடியேற்கு முன்நின்று அருள்
                                       -கந்தர் கலி வெண்பா

என்று இறைவனை வேண்டுகின்றார்.

     இலக்கணம் ஐந்தாகப் பிரிந்தாலும் ஒவ்வோர் இலக்கணம் பற்றிய
நூல்களே முதலில் தோன்றியுள்ளன. இறையனார் அகப்பொருள்,
நம்பியகப்பொருள் விளக்கம் என்பவை அகப்பொருள் பற்றியும், புறப்பொருள்
வெண்பா மாலை புறப்பொருள் பற்றியும், யாப்பருங்கலம்,
யாப்பருங்கலக்காரிகை என்பன யாப்பிலக்கணம் பற்றியும், தண்டியலங்காரம்
அணி பற்றியும் தோன்றின.

     நேமிநாதம், நன்னூல் இரண்டும் எழுத்து, சொல் பற்றிய இலக்கண
நூல்களாகும். நன்னூல் ஐந்திலக்கணமும் கூறியது என்ற கருத்தும்
நிலவுகின்றது. மயிலைநாதர் உரையில் அதற்குச் சான்றுகள் உள்ளன.
சங்கரநமச்சிவாயர், நன்னூல் சிறப்புப்பாயிரவுரையில், “நுதலிய பொருள்
அரும் பொருள் ஐந்து என உணர்த்தினமையின், இந்நூலுள் கூறிய பொருள்
யாப்பு அணி என்னும் மூன்று அதிகாரங்களும் அக் காலத்து உள்ளன
போலும்” என்று உரைக்கின்றார். ஆதலின் காலத்திற்கு அவை முன்பே
மறைந்திருத்தல் வேண்டும்.

     தமிழ் இலக்கணத்தை ஐவகையாக்கி ஆராய்ந்து விளக்கிய முதல் நூல்
வீரசோழியம். அதன் உரையாசிரியர் பெருந்தேவனாரைப் பற்றி முன்னரே
அறிந்தோம்.

     பதினேழாம் நூற்றாண்டிற்குப் பின்னர் ஐந்திலக்கணங் கூறும் இலக்கண
நூல்கள் சில தோன்றின. இலக்கண விளக்கம், தொன்னூல் விளக்கம், முத்து
வீரியம், சாமி நாதம் என்ற இலக்கண நூல்கள் ஐந்திலக்கணமும் கூறுபவை.

நூலும் உரையும்

    இலக்கண விளக்கம்: இலக்கண விளக்கம் என்பது எழுத்து சொல்
பொருள் யாப்பு அணி என்ற ஐந்தையும் உணர்த்தும் இலக்கண நூல்.
இதனைக் குட்டித் தொல்காப்பியம் என்பர்.