பக்கம் எண் :

உரையாசிரியர்கள்650

நூலேயன்றி ஐவகை இலக்கணங்களையும் உணர்த்தும் சாமிநாதம் எனப்
பெயரிய நூலொன்றும் இவர் இயற்றி இருக்கின்றார். இந் நூல் துறைசை
சுப்பிரமணிய தேசிகரின் ஆணைப்படி இயற்றப்பட்டது என இந்நூற்பாயிரம்
உணர்த்துகின்றது. சாமிநாதத்திற்கு விருத்தியுரை ஒன்றும் உள்ளது. ...இது
சுமார் கொல்லம் 950-ல் இயற்றப்பட்டது ஆகலாம் எனத்துணியலாம்”
(இலக்கிய மணி மாலை (1954) பக்கம் 218, 219)

ஐந்திற்கும் மேலாக

     ஐந்திலக்கணங்களுக்குப் பின்னர், இலக்கணம் விரிவடைந்தது.

     தொல்காப்பியர், உயிரியல் இடையியல் மரபியல் ஆகியவற்றில்
கூறியுள்ள சொற்பொருள் விளக்கம், நிகண்டுகளாக - உரிச்சொற்பனுவலாக -
அகராதியாக உருவெடுத்து வளர்ந்தன.

     பெண்களின் உறுப்பிற்கும், சிறுவர்களுக்கும் கூற வேண்டிய
உவமைக்குரிய பொருள்களைப் பட்டியல் போட்டுக் கூறுகின்ற உவமான
சங்கிரக நூல்கள் தோன்றின.

     பாட்டியல் நூல்கள் கூறுகின்ற 96 வகையான பிரபந்தங்களின்
இலக்கணத்தைத் தொகுத்து, பிரபந்த தீபிகை என்ற நூலை, வேம்பத்தூர்
பாப்புவையர் என்ற முத்து வேங்கடசுப்பையர் இயற்றினார்.

    பிற்காலப் பா வகைகளில் ஒன்று, வண்ணப்பா. வண்ணச் சரபம்
திருப்புகழ் தண்டபாணி சுவாமிகள் ‘வண்ணத்தியல்பு’ என்று நூலில்
வண்ணப்பாக்களுக்கு இலக்கணம் எழுதினார். இந்த நூல், திருக்கோயில்
இதழில் உரையுடன் வெளிவந்துள்ளது.

     விருத்தப்பாக்களின் வகைகளை விளக்குகின்ற 182 நூற்பாக்கள் (12
படலம்) அடங்கிய நூலை, சென்னை டி.வீரபத்திர முதலியார் (1855-1910)
எழுதினார்.

     20-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தண்டபாணி சாமி ‘அறுவகை
இலக்கணம்’ என்ற நூலை இயற்றினார். ஆறாவதாக, புலமை இலக்கணம்
செய்தார். இதில் 319 நூற்பாக்கள் உள்ளன.

15. காரிரத்தினக் கவிராயர்

     காரிரத்தினக் கவிராயர் பதினேழாம் நூற்றாண்டில் வாழ்ந்த வைணவப்
புலவர். இவர் திருநெல்வேலி மாவட்டத்தில் ஆழ்வார் திருநகரிக்கு அருகில்
உள்ள தென் திருப்பரையில் வேளாண் மரபில் பிறந்தவர்.