காரிரத்தினம் என்பது நம்மாழ்வாரின் சிறப்புப் பெயர். வைணவராகிய இக் கவிராயர் நம்மாழ்வாரின் பெயரைப் பெற்றார். இவர், ஆழ்வார் திருநகரியில் இருந்தவரும், மாறன் அலங்காரம் முதலான நூல்களை இயற்றியவருமான திருக்குருகைப் பெருமாள் கவிராயரிடம் கல்வி பயின்றார். இவர், திருக்குறள் பரிமேலழகர் உரைக்கு விளக்கமாக ‘நுண் பொருள் மாலை’ என்ற ஒரு நூலை இயற்றியுள்ளார். அவ் விளக்கவுரை செந்தமிழில் (6-10) வெளிவந்தது. தொல்காப்பிய நுண்பொருள் மாலை என்ற உரை விளக்கம் எழுதியதாகக்கூறுவர். அவ்வுரை இன்று கிடைக்கவில்லை. திருக்குருகைப் பெருமாள் கவிராயர் இயற்றிய மாறன் அலங்கார நூலுக்கு உரை இயற்றினார். நுண்பொருள் மாலை பரிமேலழகர் உரைக்கு விளக்கமாக இயற்றப்பட்ட இவ் விளக்கவுரை பல சிறப்புக்களை உடையது. பரிமேலழகர் உரையில் விளக்கம் காண வேண்டி பகுதிக்கும், பலமுறை நுணுகிக் கற்றுத் தெளிய வேண்டிய பகுதிக்கும் அரிய இலக்கணக் குறிப்புக்கும் விளக்கம் எழுதுகின்றார் காரிரத்தினக் கவிராயர். முதற் குறளின், பரிமேலழகர் உரைக்கு இவர் தரும் விளக்கம் மிகவும் நயமானது. ஆகுபெயர் அன்மொழித் தொகை ஆராய்ச்சியில் பரிமேலழகர் உள்ளக் கிடக்கையை அறிய .ஊழிற் பெருவலி (380) என்னும் குறளின் விளக்கவுரை உதவுகின்றது. பரிபாடலுக்குப் பரிமேலழகர் உரை எழுதினார் என்பதை 216-ஆம் குறள் உரையில், “பரிபாட்டினுள் ‘மழையிருஞ்சூல்’ என்பதனை முன்பின்னாகத் தொக்க இரண்டாம் வேற்றுமைத் தொகை என்றார் இவ்வுரையாசிரியர்” என்று இவர் தெளிவுபடுத்துகின்றார். மாறன் அலங்காரவுரை மாறன் அலங்காரம், நம்மாழ்வாரைத் தலைவராகக் கொண்டு இயற்றப்பெற்ற மேற்கோள் பாடல்களுடன் அமைந்த அணி இலக்கண நூல். இந்நூல் பொதுவியல், பொருளணியியல், சொல்லணியியல், எச்சவியல் என்னும் நான்கு பகுதிகளை உடையது. முதல் இயல் வெண்பாவிலும் ஏனையவை ஆசிரியப்பாவிலும் அமைந்துள்ளன. இந்நூலை இயற்றியவர், திருக்குருகைப்பெருமாள் கவிராயர்; வைணவர்; பதினேழாம் நூற்றாண்டினர். திருநெல்வேலியில் ஆழ்வார் திருநகரியில் |