பக்கம் எண் :

உரையாசிரியர்கள்652

வாழ்ந்தவர். இவரது மாணவராகிய காரிரத்தினக் கவிராயரே மாறன்
அலங்காரத்திற்கு உரை இயற்றினார்.

     இந் நூலிலுள்ள உதாரணச் செய்யுள்களை நூலாசிரியரே இயற்றினார்.
உதாரணம் தேடும் முயற்சி உரையாசிரியர்க்கு இல்லாமல் போனது.
‘இந்நூலாசிரியர் இவ்வுதாரணம் யாண்டுப் பெற்றாரோ எனில்,’ என்று
உரையாசிரியர் கூறி, உதாரணச் செய்யுளுக்குப் பொழிப்புரை எழுதுகின்றார்.
சில பாடல்களுக்குக் குறிப்புரை எழுதுகின்றார். பாடல்களுக்குத் திணை,
துறை கூறி, அணி இலக்கணத்தோடு பொருத்திக் காட்டுகின்றார்.

     உதாரணச் செய்யுள்கள் கற்பனைக் களஞ்சியமாய் - சொற்சுவை
பொருட்சுவை நிரம்பியவையாய் உள்ளன. பொருள் விளங்குவது சற்றுக்
கடினமாகவே உள்ளது. உதாரணச் செய்யுள் ஒன்றை இங்கே காண்போம்:

    முற்ற உணர்த்தும் முதுகாப் பியம்புணர்ப்பான்
    உற்றவர்தம் கண்போன்று உறங்காவாம்-இற்பிரிந்தால்
    நல்லியலார் வந்தனைசெய் நாவீறன் மால்வரைமேல்
    மெல்லியலார் இன்ப விழி

என்ற வெண்பா பொருளணியியலில் ஏகவுவமைக்கு உதாரணமாகக்
காட்டப்பட்டுள்ளது.

     உரையின்றேல் நூலின் பெருமையும், உதாரணச் செய்யுள்களின்
பொருளும் வெளிப்பட்டிரா. நூலாசிரியரின் மாணவர் இவ்வுரையாசிரியர்
ஆதலின், “இக் குறிப்புவமை இந்நூலுடையார் யாண்டுப் பெற்றார் எனின்,
நலமிகு புலவர், “உலகம் உவப்ப...அவிரொளி” எனக் கூறிய
முருகாற்றுப்படுத்ததுள் பெற்றாராம்” என்று நூலாசிரியரின் உள்ளம் அறிந்து
கூறுகின்றார் (99).

     இவ்வுரையாசிரியரின் உரைத் திறனை அறிந்து, ‘கருகாத செஞ்சொல்
உரை விரித்தான் கற்பகாடவிபோல் வருகாரி ரத்ன கவிராயன்’ என்று,
சிறப்புப்பாயிரம் புகழ்கின்றது.

16. உவமான சங்கிரக உரை

     அணி இலக்கண நூல்கள் அணி வகைகளைக் கூறி, அவற்றின்
இயல்புகளை விளக்கி, ஏற்ற உதாரணப் பாடல்களையும் காட்டி
விளக்குகின்றன. பாட்டியல் நூல்கள், பிள்ளைத் தமிழ் நூல்களில் இன்ன
இன்ன பொருள்களைக் குழந்தைகளுக்கு உவமை கூறவேண்டும் என்று
விதிக்கின்றன. உவமான சங்கிரக