நூல்கள் பெண்ணைக் கேசாதி பாதமாக வருணிக்கும்போது, எந்த எந்தப் பொருளை உவமையாகக் கூற வேண்டும் என்று பட்டியல் தருகின்றன. தமிழில் மூன்று உவமான சங்கிரக நூல்கள் உள்ளன. அவற்றுள் ஒன்று ஆறுமுக நாவலரால் இரத்தினச் சுருக்கத்துடன் சேர்த்து வெளியிட்ப்பட்டது. மற்றொன்று கொங்கு நாட்டுப் புலவர் இயற்றிய ஆசிரிய விருத்தத்தால் ஆன நூல். மூன்றாவது நூல் செந்தமிழ் பதினான்காம் தொகுதியுள் (பக்கம் 161-165) வெளியிடப்பட்டுள்ளது. இம் மூன்று நூல்களுள் ஆறுமுக நாவலர் வெளியிட்ட உவமான சங்கிரகத்தை இயற்றியவர் ஸ்ரீவில்லிபுத்தூர்த் திரு வேங்கடையர் என்று குறிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு குறித்திருப்பது தவறு என்றும், அதனை இயற்றியவர், திருமேனி குருகை இரத்தின கவிராயர் என்பவரே என்றும் தக்க சான்றுகளுடன் நிறுவியுள்ளனர். செந்தமிழ் பதினான்காம் தொகுதியுள் (பக். 16) சடகோப ராமாநுசாசார்யன் தமக்குக் கிடைத்த உவமான சங்கிரகப் பழைய ஏட்டில் பதினேழாம் செய்யுளாகக் கீழ்வரும் பாடல்காணப்பட்டதாகக் குறிப்பிடுகின்றார்: பார்புகழ் குருகை யூரன் பைங்குவ ளைத்தார் மார்பன் நாரியர் வேளாம் ரத்ந நாற்கவிச் சிங்கம் எங்கோன் வார்முலை மடவார் தேக வன்னனை அனைத்தும் தேர்ந்து சீர்புனை தமிழால் மாறன் திருவடி தொழுது செய்தான். இப்பாடல் ‘திருமேனி குருகை இரத்தின கவிராயர்’ உவமான சங்கிரகம் செய்தார் என்று குறிப்பிடுகின்றது. இந்த உவமான சங்கிரகத்தினுள் உள்ள பதினாறு வெண்பாக்கள் அந்தாதியாக உள்ளன. முதல் வெண்பா காப்புச் செய்யுள் ஏனைய பதினைந்து வெண்பாக்கள் கேசாதி பாத வருணனைக்குரிய உவமைப் பொருள்களைக் கூறுகின்றன. இந்நூலுக்குக் காஞ்சிபுரம் இராம யோகிகள் சிறந்த உரை இயற்றியுள்ளார். இவ்வுரை 1914ஆம் ஆண்டில் வெளிவந்துள்ளது. வெண்பாவிற்குப் பதவுரை இயற்றிய பின்னர் விசேடவுரையும் தருகின்றது. |