இந்நூலுடன் இவர் இரத்தினச் சுருக்கம் என்ற நூலுக்கும் உரை எழுதிச் சேர்த்துள்ளார். 17. அணிநூல் உரைகள் ‘தொனிவிளக்கு’ என்ற நூல் வடமொழியில் உள்ள ‘த்வந்யாலோக’ என்னும் நூலின் மொழிபெயர்ப்பாகும். அந்நூல் வடமொழியில் அலங்கார இலக்கண நூல்களுள் சிறந்ததாகப் போற்றப்படுகின்றது. அது ஒன்பதாம் நூற்றாண்டில், காஷ்மீரத்தில், அவந்தி வர்மன் அவையில் இருந்த புலவர்களுள் ஒருவரான ஆனந்த வர்த்தனரால் இயற்றப்பெற்றது. ‘த்வந்யாலோக’ என்ற வடமொழி அணியிலக்கண நூலைத் தமிழில் ‘தொனி விளக்கு’ என்ற பெயரில் பின்னங்குடி சா. சுப்பிரமணிய சாஸ்திரி நூற்பாவால் மொழி பெயர்த்து (1944), உரையும் தாமே இயற்றி வெளியிட்டார். இலக்கணத்திற்குத் தேவையான மேற்கோள் பாடல்களை வடமொழியிலிருந்து மொழிபெயர்த்துக் காட்டியுள்ளார். குவலயானந்தம் என்னும் அணி நூலை மாணிக்கவாசகர் என்பவர் (19 ஆம் நூற்.) இயற்றியுள்ளார். மு. இராகவ ஐயங்காரின் தந்தையார் முத்துச்சாமி ஐயங்கார். சந்திரலோகத்தை வடமொழியிலிருந்து ஆசிரியப் பாவால் மொழிபெயர்த்துள்ளார். இது உரையுடன் மதுரைத் தமிழ்ச் சங்க வெளியீடாக வந்துள்ளது. |