பக்கம் எண் :

உரையாசிரியர்கள்656

அதன் பொருள். சிந்தாமணி உரையிலும், திருமுருகாற்றுப் படையிலும்
வீற்றிருத்தல் என்பதற்குக் கவலையற்றிருத்தல் என்று நச்சினார்க்கினியர்
பொருள் கூறியிருக்கிறார்” என்று உரைக்கின்றார்கள்.*

     திருவள்ளுவமாலையுரையில் மற்றோரிடம் மறுக்கப்படுகின்றது.
‘உப்பக்கம் நோக்கி’ என்ற பாடலில் (21), ‘உபகேசி தோள்மணந்தான்’ என்ற
வரிக்குச் சரவணப் பெருமாளையர் எழுதியுள்ள உரை, சைவ சமயச் சார்பாய்
உள்ளது. சமயப் பற்றின் காரணமாய் உண்மை உரை காணத் தவறி விட்டார்.
உபகேசி தோள்மணந்தான்’ என்பதற்கு, ‘உமாதேவியினது தோளை மணந்த
கடவுள்’ என்று பொருள் கூறி, “கேசி திருமால்; இது அக்கடவுள் சகசிர
நாமத்தில் கண்டது. கேசிக்கும் பின்னே பிறந்தவள் உபகேசி என்றாயது”
என்று விளக்குகின்றார்.

     ஆனால், மற்ற உரையாசிரியர்கள் உபகேசி என்பதற்கு நப்பின்னை
என்றும், உபகேசி தோள்மணந்தான் என்பதற்குத் திருமால் என்றும் பொருள்
கூறுகின்றனர்.

     நேமிநாத உரையாசிரியர், ‘உட்பக்கம் நோக்கி’ என்ற பாடலைக் காட்டி,
“உபகேசி ஆவாள் நப்பின்னைப் பிராட்டியார்” என்று கூறகின்றார் (நேமி-30).

     “இச் செய்யுளில் ‘உபகேசி தோள்மணந்தான்’ என்றது கண்ணபிரானை.
உபகேசம்-மயிராற்பின்னிய பின்; அதனால் பெயர் சிறந்தாள் பின்னைப்
பிராட்டி. உபகேசத்தை உடையாளை உபகேசி என்பது தமிழ் நூல் முடிபு.
குண்டலகேசி நீலகேசி பிங்கலகேசி என்றாற் போலக் கொள்க. இதனால்
உபகேசியும் பின்னையும் ஒரு பொருட் பன்மொழியாதல் காண்க” என்று
ரா. இராகவ ஐயங்கார் செந்தமிழ் முதல் தொகுதியில் கூறியுள்ளார்.

     “நப்பின்னை என்பதில் உள்ள ‘ந’ சிறப்புப் பொருள் உணர்த்துவதோர்
இடைச்சொல், நச்செள்ளை நப்பாலத்தன் நக்கீரன் என்றாற்போல. நப்பின்னை
(என்பதன்) விகாரமும் ஆம்” என்கின்றார் நச்சினார்க்கினியர் (சீவக-74).

ஆறுமுக நாவலர் (1822-1879)

    நாவலர் என்று கூறினாலே ஆறுமுக நாவலர் தான் முதலில் நம்
நினைவுக்கு வருவார். தாம் வாழ்ந்த காலத்தில் நாவலர் என்ற பெயரைத்
தமக்கு உரியதாக்கிச் சிறந்து விளங்கிய வித்தகர் இவர். நாவலர் என்ற
சிறப்புப் பெயரைப் பெற்ற இவர் சைவ சமயத்தின் காவலராய் - தமிழ்
மொழியின் புரவலராய் விளங்கினார்.


 * சங்கத்தமிழும் பிற்காலத் தமிழும் (பக்கம் - 179)