நாவலர் யாழ்ப்பாணத்து நல்லூரிலே செல்வாக்கு மிகுந்த சைவ வேளாளர் குடியில் 1822-ஆம் ஆண்டில் (மார்கழி மாதம்) பிறந்தார். தந்தையார் கந்தப்பிள்ளை. தாயார் சிவகாமியம்மை. இளமை முதற்கொண்டே கல்வியில் ஆர்வமுடைய இவர், தமிழும், ஆங்கிலமும் பயின்று இருமொழிப் புலமை பெற்றார். சைவசமய நூல்களைப் பயின்று தெளிந்து சிவனருட் செல்வர் ஆனார். இவர் சொற்பொழிவாற்றும் திறனை வியந்து போற்றி, திருவாவடுதுறை ஆதீனத்தலைவராய் இருந்த சுப்பிரமணிய தேசிகர், நாவலர் என்ற பட்டத்தை வழங்கினார். மேடைத்தமிழின் வீறெல்லாம் அறிந்த இவர், உரை நடைத் தமிழின் நுட்பத்தை, அறிந்து பத்தொன்பதாம் நூற்றாண்டிலேயே ‘தமிழ் உரைநடைத் தந்தை‘யாக விளங்கினார். அறிஞர் பெருமக்களின் புகழுக்கும் போற்றுதலுக்கும் உரியவரானார். சி. வை. தாமோதரம் பிள்ளை, “நல்லை நகர் ஆறுமுக நாவலர் பிறந்திலரேல் சொல்லு தமிழ் எங்கே? சுருதி எங்கே?” என்று நாவலரின் தமிழ்த் தொண்டினைப் போற்றுகின்றார். பரிதிமாற் கலைஞர் “வசன நடை கை வந்த வல்லாளர்” என்று இவரது உரைநடைத்திறனை்ப பாராட்டுகின்றார். ஆறுமுக நாவலரின் தமிழ்த் தொண்டினைப் பாராட்டித் தமிழகச் செய்தித்தாள் ஒன்று, நாவலர் வாழ்ந்த காலத்திலேயே புகழ்ந்து எழுதியது. டாக்டர். உ. வே. சாமிநாத ஐயரின் ஆசிரியராகிய மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை ஒரு சமயம் வேதநாயகம் பிள்ளையைச் சந்தித்து வரச் சென்றார். அப்போது வேதநாயகம் பிள்ளை தாம் படித்த செய்தித்தாளில், தமிழ்ப் புலவர்கள் இருவரைப் போற்றி எழுதியிருந்த புகழுரையைப் படித்துக் காட்டினார் அப்புகழுரை பின்வருமாறு: “இக் காலத்தில் தமிழ்நாட்டிற்கு இரண்டு கண்களாக விளங்குகினறவர் இருவர். அவருள் ஒருவர் வசனம் எழுதுவதில் ஆற்றலுடையவர்; மற்றொருவர் செய்யுள் இயற்றுவதில் ஆற்றலுடையவர்; வசனம் எழுதுபவர் ஆறுமுக நாவலர்; செய்யுள் செய்பவர் மீனாட்சி சுந்தரம்பிள்ளை. நாவலர் சிதம்பரத்தில் பாடசாலை வைத்துத் தமிழைப் பரிபாலித்து வருகிறார்; மற்றொருவர் தாமே நடையாடு புத்தக சாலையாக இருந்து தம்முடைய செலவிலேயே பிள்ளைகளைப் படிப்பித்து வருகிறார்.”* * மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் சரித்திரம் II (1940) பக்கம். 104 - டாக்டர் உ.வே.சா. |