ஆறுமுக நாவலர், சைவ சமயத்திற்கும் தமிழ் மொழிக்கும் பலவகையாய்த் தொண்டு புரிந்தார். சைவ சமயச் சொற்பொழிவுகள் ஆற்றியும், சைவத்தை எதிர்த்தவர்களை எதிர்த்துக் கண்டன நூல்கள் இயற்றியும் சைவத்தை வளர்த்தார். பழந்தமிழ் இலக்கணங்களையும் உரைகளையும் இலக்கியங்களையும் பதிப்பித்தும், உரை இல்லாதவற்றிற்கு உரை எழுதியும், தமிழ் கற்கும் மாணவர்களுக்கு ஏற்ற உரை நடை நூல்கள் இயற்றியும் தமிழ் மொழியை வளர்த்தார். ஆறுமுக நாவலர் இயற்றிய உரைகள்: கோயிற்புராணவுரை, நன்னூல் காண்டிகையுரை, மருதூர் அந்தாதியுரை, திருச்செந்தில் நிரொட்டயமக அந்தாதியுரை, சைவ சமய நெறியுரை, சிவதருமோத்தரவுரை திருமுருகாற்றுப் படையுரை, நீதிவெண்பாவுரை என்பன. இவையேயன்றித் திருவிளையாடற் புராண வசனம், பெரிய புராண வசனம், ஆகியவற்றையும் எழுதியுள்ளார். ஆறுமுக நாவலர் உரைத்திறனுக்கு ஒரு சான்று காண்போம். நீதி வெண்பா உரையில், நன்றறியாத் தீயோர்க் கிடங்கொடுத்த நல்லோர்க்கும் துன்று கிளைக்கும் துயர்சேரும்-குன்றிடத்தில் பின்இரவில் வந்தகரும் பிள்ளைக் கிடங்கொடுத்த அன்னமுதற் பட்டதுபோ லாம் (-74) என்ற பாடலில் உள்ள கதையை நாவலர் பின்வருமாறு விளக்குகின்றார். “எவராலும் ஏற முடியாத ஒரு பெரிய மலைக்குகையில் ஓர் அரச அன்னம் அன்னப் பட்சிகளோடு வாசம் செய்து கொண்டிருக்கும் போது, ஒருநாள் இரவு பெருமழையினால் வருந்திய ஒரு காக்கை, தான்இருக்க இடம்கேட்டது. மந்திரியாகிய அன்னம் காக்கைக்கு இடம் கொடுக்கலாகாது என்று சொல்லவும், அரச அன்னம் அதன் சொல்லைக் கேளாமல் காக்கைக்கு இடம் கொடுத்தது. காக்கை அன்று இரவில் அங்கே தங்கி எச்சமிட அவ் எச்சத்தில் இருந்து ஆலம் வித்து முளைத்து எழுந்து பெரிய விருக்ஷமாகி, விழுதுகளை விட்டது. ஒரு வேடன் விழுதுகளைப் பற்றிக் கொண்டு அம்மலையில் ஏறிக் கண்ணிவைத்து அன்னங்களைப் பிடித்தான்”. இராமலிங்க அடிகள் இராமலிங்க அடிகள், வள்ளலார் என்ற பெயரோடு, உலக மக்கள் போற்றும் அருட்பெருஞ்சுடர். இவரது வாழ்க்கை வரலாற்றை நாடு நன்கு அறியும். |