வள்ளலார், உரையாசிரியராய் - பதிப்பாசிரியராய்ச் சிறந்து விளங்கினார். இவர் இயற்றிய உரை நூல்கள்: 1. பொன்வண்ணத்தந்தாதி (பாடல்-22) உரை 2. வேதாந்ததேசிகர் குறட்பா உரை 3. தமிழ் என்பதன் உரை 4. ஒழிவிலொடுக்க உரை 5. பெரியபுராண உரை 6. தொண்ட மண்டல சதக உரை வள்ளலாரின் உரைத்தொண்டு, திருவருட்பா வியாக்கியானப்பகுதி (மூன்றாம் புத்தகம் பாலகிருஷ்ணபிள்ளை பதிப்பு) யில் நன்கு விளக்கப்பட்டுள்ளது. இதில் உள்ள பாயிரம் என்ற அரிய ஆராய்ச்சி முன்னுரை, பல நல்ல கருத்துக்களைத் தெரிவிக்கின்றது. அவற்றைக் காண்போம்: “சுவாமிகள் மறந்தும் தாம் ஓர் வியாக்கியான கர்த்தாவாகத் தொழிற்படவிரும்பவில்லை. தம்மைவியாக்கியான கர்த்தாவாக அவர்கள் கருதவில்லை. இவ் வியாக்கியானங்களில் பெரும் பாலான அன்பர்கள் பற்பலரின் பல நாள் வேண்டுகோட்களைத் தொடர்ந்து மறுக்க மனம் வராத பரம தாக்ஷிண்ய நிலையில் அவரவர் பொருட்டு அப்போதப்போது எழுதி உதவியன.” இவ்வாறு வள்ளலார் உரைத் தொண்டின் வரலாறு கூறப்படுகின்றது. வள்ளாரின் உரை நூல்கள் வாயிலாக அவரது பல திறப்பட்ட புலமைகள் வெளிப்படுகின்றன. “ஒழிவிலொடுக்க உரையினின்றும் அவர்களது சித்தமார்க்க ஞானத்தையும்: குறட்பா உரையினின்றும் அவர்களது சித்த மார்க்க ஞானத்தையும்: தமிழ் உரையினின்றும் அவர்களது மந்திர சாஸ்திர ஞானத்தையும்; தொண்ட மண்டல சதக உரையினின்றும் அவர்களது இலக்கிய இலக்கண தர்க்க ஞானத்தையும்; பெரியபுராண உரையினின்றும் அவர்களது வேதாகம தத்துவாநுபவ ஞானத்தையும் அறிந்து கொள்ளலாம்.” (பாயிரம் பக்-21). வள்ளலார் காலத்தில் வாழ்ந்த ஆறுமு நாவலர், இவரது உரை நூல்களில் உள்ள குற்றங்களை எடுத்துக் காட்டினார். |