பக்கம் எண் :

உரையாசிரியர்கள்660

தொண்ட மண்டலமா? தொண்டை மண்டலமா? என்ற வினாவை எழுப்பினார்.
வள்ளாரின் ஒழிவிலொடுக்க உரைப்பதிப்பில் இருந்த தவறுகளைப் பட்டியல்
போட்டு, சிறு நூல் ஒன்று வெளியிட்டார்.

     நாவலரின் மறுப்புரை, நம் ஆராய்ச்சியைத் தூண்டுகிறது; நாவலரின்
புலமை மாண்பைக் காட்டுகின்றது. ஆதலின், நாவலர் வெளியிட்ட மறுப்பை
அறிய விரும்புவோர், ஆறுமுக நாவலர் பிரபந்தத் திரட்டு என்ற நூலில்
உள்ள ‘போலியருட்பா மறுப்பு’ என்ற கட்டுரையைப் படித்துப் பார்க்கலாம்.*

நினைவில் நிற்பவர்கள்

    பத்தொன்பதாம் நூற்றாண்டில் அச்சு இயந்திரங்கள் பெருகியபோது,
பழைய நூல்களுக்கு உரை எழுதி வெளிப்படுத்தும் பணியில் பலர்
ஈடுபட்டனர். அப் பணியில் ஈடுபட்ட தமிழ்ப் பெருமக்களைப் பற்றி மிகச்
சில வரலாற்றுக் குறிப்புக்களே கிடைக்கின்றன. அவற்றைத் தொகுத்துக்
காண்போம்.

வேதகிரி முதலியார் (1799-1852)

    சூடாமணி நிகண்டு பதினொன்றாம்தொகுதி, திருக்குறள், நைடதம்
ஆகியவற்றிற்கு உரை இயற்றினார்.

சந்திர சேகர கவிராச பண்டிதர் (?-1883)

    இவர் இயற்றிய உரைகள்: நன்னூல் விருத்தியுரை, யாப்பருங்கலக்
காரிகையுரை, தண்டியலங்காரவுரை.

வல்லை வைத்தியலிங்கம் பிள்ளை

    இவர் அகப்பொருள் விளக்கம் (1878), கந்த புராணம், (1878), கல்வளை
யந்தாதி (1888) ஆகியவற்றிற்கு உரைஎழுதினார்.

மாங்காடு வடிவேல் முதலியார்

    உரை கண்ட நூல்கள்: திருப்புகழ், ஒளவைகுறள், நெஞ்சறி விளக்கம்,
மஸ்தான் சாகிப் பாடல்கள், சாதக அலங்காரம், பட்டினத்தார் பாடல்கள்.

கோமளபுரம் இராச கோபால் பிள்ளை

    இவர் சென்னை மாநிலக் கல்லூரியில் தமிழ்த்துறையில் பணியாற்றியவர்.
உரைகண்ட நூல்கள்: நாலடியார், நளவெண்பா திருவாய்மொழி.


 * பார்க்க பிற்சேர்க்கை - 7.