பக்கம் எண் :

665ஆய்வு

அரசன் சண்முகனார் (1868-1915)

    அரசன் சண்முகனார், மதுரை நகருக்கு அருகில் உள்ள சோழவந்தான்
என்னும் ஊரில் 1868ஆம் ஆண்டு பிறந்தார். இவரது தந்தையார் பெயர்
அரசப்பிள்ளை. தாயார் பெயர் பார்வதியம்மையார். இவர் சைவ வேளாளர்
குலத்தினர்.

     இவர் இளமையிலே ஆர்வத்தோடு கல்வி கற்றுப் பெரும் புலமை
பெற்றுவிட்டார். தம் காலத்தில் பலர் போற்ற வாழ்ந்த பெரும் புலவராக
விளங்கினார்.

     இவர் இயற்றிய உரை ஆராய்ச்சி நூல்கள் இரண்டு. ஒன்று
தொல்காப்பியப்பாயிர விருத்தி; மற்றொன்று திருக்குறள் உரை விளக்கம்.
செந்தமிழ் இதழ்களில் இடம் பெற்று வெளிவந்தன. தொல்காப்பியப்பாயிர
விருத்தி சண்முக விருத்தி என்ற பெயருடன் வெளிவந்துள்ளது. இந் நூலை
இலக்கணப் புலமை பெற விரும்புவோர் விரும்பிப்பயில்கின்றனர். இந் நூல்
ஓர் இலக்கண ஆராய்ச்சிக் களஞ்சியம்.

     இவர் கலந்துகொண்ட புலமைப் போர்கள் பல. அவற்றுள்
‘உம்மை’யைப் பற்றி நிகழ்த்திய ஆராய்ச்சியும் மறுப்பும் குறிப்பிடத் தக்கவை.
‘உம்மை’ ஆராய்ச்சியில் ஈடுபட்டு வென்ற சண்முகனார் முடிவில், “இதுகாறும்
உம்மை நிலை அறியாதிருந்த நீவீர் இனியேனும் உம்மை நிலை அறிவீராக”
என்று இரு பொருள்பட எழுதினார்.

கோ. வடிவேல் செட்டியார்

    “வடிவேல் செட்டியார் தமிழ்க் கருவூலம்; வேதாந்தக் களஞ்சியம். அவர்
வேதாந்தக் கடலில் அழுந்தினவர். அதனால் அவரது நெஞ்சம் தம்மைத்
தொல்காப்பியப் புலவர் என்றோ சங்க இலக்கிய வல்லவர் என்றோ
நினைக்கவும் அவரை விட்டதில்லை. செட்டியாரின் (பரிமேலழகர் உரை
விளக்கம்) குறிப்புரையும், கைவல்ய விளக்கவுரையும் அவரது கல்வித்
திறத்தைப் புலப்படுத்தா நிற்கின்றன.” என்று திரு. வி. க. வடிவேல்
செட்டியாரைப் போற்றுகின்றார்.*

டாக்டர் உ. வே. சாமிநாத ஐயர்

    சிறந்த பதிப்பாசிரியராகிய டாக்டர் உ. வே. சாமிநாத ஐயர் சில
நூல்களுக்கு உரையும் எழுதியுள்ளார். குறுந்தொகைக்கு உரையும்,
பெருங்கதை, மணிமேகலை, குமர குருபரர் நூல்கள் ஆகியவற்றிற்குக்
குறிப்புரையும் இயற்றியுள்ளார்கள். இவரது உரைகள் ஆராய்ச்சிக் களஞ்சியம்.


 * திரு. வி. க. வாழ்க்கைக் குறிப்புக்கள் - பக்கம் 175.