நூல்கள் மேற்கோள் காட்டவில்லை என்பதையும் இங்கே நினைவுபடுத்திக் கொள்ள வேண்டும். யாப்பருங்கல விருத்தியுரை (93 சூத்திர உரை), கோழியும் கூவின குக்கில் அழைத்தன தாழியுள் நீலத் தடங்கணீர் போதுமினோ ஆழிசூழ் வையத்து அறிவன் அடியேத்தி கூழை நனையக் குடைந்தும், குளிர்புனல் ஊழியுள் மன்னுவோம் என்றேலோர் எம்பாவாய் என்ற பாடலை மேற்கோளாகக் காட்டியதே ஒழியத் திருப்பாவையிலிருந்தோ, திருவெம்பாவையிலிருந்தோ மேற்கோள்காட்டவில்லை. இவ்வாறே நாலாயிர திவ்வியப்பிரபந்த உரையாசிரியர்கள் சைவ சமயப் பாடல்களைப் புறக்கணித்தனர். சைவ உரையாசிரியர்களான சங்கர நமச்சிவாயர் போன்றோர் வைணவப் பாடல்களைப் புறக்கணித்தனர். இக்காரணங்களால், சங்க காலத்திற்குப் பின் தோன்றிய பல இலக்கியங்கள் உரையாசிரியர்களின் உரையில் மேற்கோள்களாக இடம் பெறவில்லை. ஐந்தாவது காரணம் காலத்திற்குக் காலம் மாறிவந்த அரசியல் சூழல், உரையாசிரியர்களை மேற்கோள் காட்டுவதில் கட்டுப்படுத்தியது என்னலாம். தத்தம் காலத்தில் அரசோச்சும் அரசர்களின் ஆதரவை உரையாசிரியர்களும் நாடினார்; பொன்னும் பொருளும் நிலமும் பரிசாகப் பெற்றனர். ஆதலின், தம் காலத்து மன்னனைப் புகழும் பாடல்களை அல்லது அவன் விரும்பும் இலக்கியத்தை மேற்கோள்களாகக் காட்டினர். யாப்பருங்கல விருத்தியுரை பல்லவ மன்னரைப் பற்றியும், வீரசோழியவுரை வீரராசேந்திரனைப் பற்றியும், தண்டியலங்காரவுரை குலோத்துங்க சோழனைப் பற்றியும், நன்னூல் மயிலைநாதர் உரை சீயங்கனைப் பற்றியும் பலப்பல உதாரணத் தொடர்களையும், மேற்கோள் பாடல்களையும் காட்டியுள்ளன. களவியலுரை, பாண்டிக்கோவையிலிருந்து பல பாடல்களைத் தந்துள்ளது. மேற்கோள் காட்டிய நூல்கள் உரையாசிரியர்கள் மேற்கோள் காட்டிய நூல்களை இனி ஆராய்வோம்: உரைகளில் மேற்கோள்களாகக் காட்டப் பெற்ற நூல்களை உரையாசிரியர்களின் கால வரிசைப்படி நோக்கினால் |