பக்கம் எண் :

உரையாசிரியர்கள்694

     பல்லவ மன்னர்களின் காலத்தில் (கி.பி. 600-900) தோன்றிய பக்திப்
பாடல்களாகிய ஆழ்வார்களின் பிரபந்தங்களும், தேவாரம், திருவாசகம்
முதலியனவும் தாம் தோன்றிய காலத்தில் உரையாசிரியர்களால் மேற்கோள்
காட்டப்பெறவில்லை. மூன்று நூற்றாண்டுகளுக்குப் பின்னர், ஏறத்தாழப்
பன்னிரண்டாம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்து பக்திப் பாடல்களில்
சில, மேற்கோளாக வருகின்றன. பரிமேலழகர் ஆழ்வார்களின் பாடல்கள்
சிலவற்றையும், பேராசிரியர் நச்சினார்க்கினியர், தக்கயாகப்பரணி
உரையாசிரியர் ஆகியோர் சைவசமயப் பெரியோர்களாகிய நாயன்மார்கின்
பாடல்களிலிருந்து சில பாடல்களையும் தம் உரைகளில் தருகின்றனர்.
பதினேழு, பதினெட்டாம் நூற்றாண்டுகளில் தோன்றிய சுவாமிநாத தேசிகர்,
சங்கரநமச்சிவாயர், சிவஞான முனிவர் ஆகியோர் தம் உரைகளில் பல
தேவார, திருவாசகச் செய்யுள்களை மேற்கோள் காட்டுகின்றனர். யாப்பருங்கல
விருத்தி பொய்கையார் பாடலையும் திருமந்திரப் பாடலையும் மேற்கோள்
காட்டுகின்றது.

     பக்தி இலக்கியங்களை அடுத்துத் தோன்றிய காப்பியம்,
புராணங்களிலிருந்து மேற்கோள் தராமல் கதையையும், பாட்டின் கருத்தையும்
உரையாசிரியர்கள் கூறிச் செல்கின்றனர். நச்சினார்க்கினியர் போன்ற
உரையாசிரியர்கள் தம் உரைகளில் பாரதம், இராமாயணம் போன்ற
இதிகாசங்களிலிருந்தும் புராணங்களிலிருந்தும் மேற்கோள்களாகப் பல
செய்திகளைக் காட்டியுள்ளனர். ஆனால் அவை யாவும் வில்லிபுத்தூரார்
இயற்றிய பாரதத்திற்கோ. கம்பர் இயற்றிய இராமாயணத்திற்கோ உரியவை
அல்ல. நச்சினார்க்கினியர் காட்டும் பாரத இராமாயணச் செய்யுட்கள் பல்லவர்
காலத்தில் தோன்றியவை.

     இனி இவற்றை விரிவாகக் காண்போம்.

     கம்பர், கவிச்சக்கரவர்த்தி என்ற பெருமைக்குரியவர்; பல ஆயிரம்
பாடல்களைப் பாடி இலக்கிய உலகில் அழியாப் புகழ் பெற்றவர்;
பெருங்காப்பியம் ஒன்றினை அருளிய பெரும் புலவர். இத்தகைய
சிறப்புக்குரியவரின் செய்யுள் மேற்கோளாகக் காட்டப் பெறாமை நமக்கு
வியப்பைத் தருகின்றது. “கம்பர் கவிதைகள் உரையாசிரியர்களால்
புறக்கணிக்கப்பட்டதேன்?” என்ற வினா அறிஞர்களின் உள்ளத்தில்
தோன்றிப் பலமுறை எதிரொலித்த வண்ணமாய் உள்ளது. அவ்வினாவிற்கு
உரிய விடையாகக் கீழ்வரும் பகுதி அமைகின்றது.

     “கம்பனுக்கு அரசனது ஆதரவு மிக்கிருந்தது என்று சொல்லக்
கூடவில்லை. பிற்காலச் சோழர்கள், சைவப்