களவியல் உரையில் பாண்டிக்கோவையி்லி்ருந்து பல பாடல்கள் எடுத்துக்காட்டாய்த் தரப்பட்டுள்ளன. களவியற்காரிகை என்ற நூலுரையும் பாண்டிக்கோவைப் பாடல்களை உதாரணங் காட்டுகின்றன. நம்பியகப் பொருள் உரையில் தஞ்சைவாணன் கோவையிலிருந்து பல பாடல்கள் தரப்படுகின்றன. திருக் கோவையாரைப் பல உரையாசிரியர்கள் எடுத்துக்காட்டாய்த் தருகின்றனர். அடியார்க்கு நல்லார் சிலப்பதிகார உரையில் கலிக்கத்துப் பரணிச் செய்யுள்களை மேற்கோளாகத் தருகின்றார். இவை தவிர ஏனைய தூது, உலா நூல்களிலிருந்து மேற்கோள் தரப்படவில்லை. முப்பெருஞ் சோழமன்னர்களின் அவைக்களத்தில் அரசவைக் கவிஞராய் விளங்கி, கவிச்சக்கரவர்த்தி என்ற புகழ்ப் பெயர் பெற்று, மூவருலா பாடிய ஒட்டக்கூத்திரின் செய்யுள் ஒன்றேனும் மேற்கோளாக வரவில்லை. தக்கயாகப்பரணி உரையாசிரியரே கூத்தரையும் அவரது செய்யுளைப் பற்றியும் நினைவூட்டுகின்றார். பிற்காலத்தில் தோன்றிய நல்வழி, மூதுரை, கொன்றை வேந்தன், ஆத்திசூடி முதலிய நீதி நூல்களிலிருந்தும் மிகுதியான மேற்கோள் உரைகளில் இடம்பெறவில்லை. யாப்பருங்கல விருத்தியுரை, ‘கொன்றை வேய்ந்த’ என்னும் கொன்றை வேந்தன் நூலின் கடவுள் வாழ்த்தை மேற்கோள் காட்டுகின்றது. பேராசிரியர் தொல்காப்பியப் பொருளதிகார உரையில் ‘கொன்றை வேய்ந்த’ என்ற கொன்றை வேந்தன் நூலின் செய்யுளையும், ‘அட்டாலும் பால் சுவை’ என்ற மூதுரைச் செய்யுளையும் மேற்கோளாகக் காட்டுகின்றார் (செய்யுள் இயல் 149, 72). ஆலம் விதை சின்னஞ் சிறிய ஆலம் விதையிலிருந்து மிகப்பெரிய ஆலமரம் தோன்றி வளர்வதுபோல், உரையாசிரியர்கள் தம் உரைகளில் காட்டியுள்ள சிறிய பாடல் ஒன்றிலிருந்து பெரிய கதையோ, கருத்தோ பின்னால் வளர்ந்திருக்கிறது. அத்தகைய பாடலைக் காண்போம். நச்சினார்க்கினயிர் தொல்காப்பியம் புறத்திணை இயல் உரையல் (22 சூத்) ‘அருளொடு புணர்ந்த அகற்சி’க்கு உதாரணமாகப் பின்வரும் செய்யுளைக் காட்டுகின்றார். புனிற்றுப் பசியுழந்த புலிப்பிணவு, தனாஅது முலைமறாக் குழவி வாங்கிவாய் மடுத்து |