பக்கம் எண் :

697நோக்கு

    இரைஎனக் கவர்வுற நோக்கி ஆங்குஅவ்
    ஏரிளங் குழவியின் முன்சென்று தாக்கும்
    கூர்நுதிப் பிணைமான் புலவுவேட்டுத் தொடங்கிய
    வாள்எயிற்றுக் கொள்ளையில் தங்கினன் கதுவ
    பாசிலைப் போதி மேவிய பெருந்தகை
    ஆருயிர்க் காவல் பூண்ட
    பேரருட் புணர்ச்சியின் அகலு மாறே.

     இப்பாடலை வீரசோழிய உரை முதன் முதலில் உதாரணங்
காட்டியுள்ளது. கருத்துச் சிறப்பும், உயர்ந்த கொள்கையும் உடைய இப்பாடல்
நச்சினார்க்கினியர் உள்ளத்தைப் பெரிதும் கவர்ந்துள்ளது.

     மேலே காட்டிய பாடல், புத்தபொருமானின் அருட்பண்பை
விளக்குகின்றது. குட்டி ஈன்ற ஒரு பெண் புலி, தன் பசியைத் தீர்த்துக்
கொள்ளக் கருதி, தாயிடம் பால் குடிக்கும் மான் குட்டியைப் பற்றியது.
உடனே, தாய்மான் குட்டியை விலக்கிக் கொண்டு புலியை எதிர்த்துத்
தாக்கியது. புலி, மான் குட்டியை விட்டு மானையே கொன்று தின்றுவிட
விரும்பி வாயை அகலத்திறந்தது. இந்தக் கொடிய காட்சியைப்
பார்த்துக்கொண்டிருந்த புத்தபெருமான், மானையும் அதன் குட்டியையும்
காப்பதற்கும், அகலத்திறந்த புலிவாயில், கூர்மையான பற்கள் கதுவுமாறு
தங்கினார். இதுவே அப்பாடலின் கருத்தாகும்.

     நச்சினார்க்கினியர் மேற்கோள்காட்டும் இப்பாடல் கூறும் கதை,
பிற்காலத்தில் திருவிளையாடற் புராணங்களில் பெரிதாக வளர்ந்தது. அப்
புராணங்களைப் பாடிய புலவர்கள் மேலே காட்டிய பாடலின் கதையை மிக
விரிவாக்கிக் கொண்டனர்.

     வேம்பத்தூர் நம்பி பாடிய திருவாலவாய் உடையார் திருவிளையாடற்
புராணத்தில், ‘புலிமுலை புல்வாய்க்கு அருளின திருவிளையாடல்’ (53) என்ற
பகுதியில் மேலே கூறிய கதை வேறு வடிவில் இடம் பெறுகின்றது. குட்டி
ஈன்ற மான், நீர் வேட்கை மிகுதியால் நீர்நிலை ஒன்றிற்கு வந்தது. அங்கே
மறைந்திருந்த வேடன் ஒருவன் அந்த மானைக் கொன்று வீழ்த்தினான்.
மான் இறக்கும்போது தன் பச்சிளங்குட்டியை நினைத்தவாறே உயிர் நீத்தது.
அதன் மீது இரக்கம் கொண்ட ஆலவாயுடையார், தாயை இழந்த
மான்குட்டிக்குப் பாலூட்ட, பக்கத்தில் இருந்த புலி ஒன்றினை ஏவினார். இக்
கதையில் புத்தபெருமான் கதைக்கு உரிய நிகழ்ச்சி எதிரொலிக்கின்றது.

     பரஞ்சோதியார் திருவிளையாடற் புராணத்தில், ‘பன்றிக் குட்டிக்கு
முலை கொடுத்த படலம்’ என்பதும் புத்ததேவனின்