பக்கம் எண் :

உரையாசிரியர்கள்698

கதையைப் பின்பற்றி அமைக்கப்பட்டதேயாகும். காட்டிற்கு வேட்டையாட
வந்தவர்களால் ஆண் பன்றியும் பெண் பன்றியும் கொன்று வீழ்த்தப்பட்டன.
தாய் தந்தையரை இழந்து தவிக்கும் பன்றிக் குட்டிகளுக்கு இரங்கி
ஆலவாயுடையார், பெண் பன்றி வடிவில் வந்து பாலூட்டினார் என்று
பரஞ்சோதியார் கதையை அமைத்துள்ளார்.

     நச்சினார்க்கினியர் காட்டும் மற்றோர் பழம் பாடலின் கருத்து,
திருக்கோவையாரில் உள்ள பாடல் ஒன்றில் இடம் பெறுகின்றது.

    இவன்வயிற் செலினே இவற்குஉடம்பு வறிதே
    இவள்வயிற் செலினே இவட்கும் அற்றே
    காக்கை இருகணின் ஒருமணி போல
    குன்றுகெழு நாடற்கும் கொடிச்சிக்கும்
    ஒன்றுபோல் மின்னிய சென்று வாழுயிரே
                                   (தொல். பொருள் 114)

என்ற பாடலை நச்சினார்க்கினியர் மேற்கோள் காட்டுகின்றார். இப் பாடல்
அவருக்கு முற்பட்ட பழம்பாடலாக இருக்க வேண்டும். அதனை
மாணிக்கவாசகர் கற்றிருக்கலாம். அப்பாடலின் கருத்து,

    காகத்து இரு கண்ணிற்கு ஒன்றே
    மணிகலந் தாங்கு இருவர்
    ஆகத்துள் ஓர் உயிர்கண்டனம்
                                       (திருக்கோவை - 71)

என்று திருக்கோவையார் பாடலில் இடம்பெறுகின்றது.

பொன்மணல்

     ஆற்றங்கரையோரத்தில் குவிந்துகிடக்கும் மணலில் அங்கங்கே பொன்
மணல் சிதறிக் கிடந்தால் அவை காண்பவர் கண்ணையும் கருத்தையும்
கவருமல்லவா? அம் மணலைப் போல உரைகளின் நடுவே காட்டப்பெறும்
மேற்கோள் பாடல்களில் சில, மிகச் சிறப்பு வாய்ந்தவையாய்க் கற்பவர்
உள்ளத்தில் ஆழப்பதிந்து எண்ணும்தோறும் இலக்கயச்சுவை நல்கிப்
பேரின்பத்தில் ஆழ்த்துகின்றன.

     உரைகளில் இடம்பெற்றுள்ள மேற்கோள் பாடல்களின் சிறப்பியல்புகளை
நன்குணர்ந்தத தமிழறிஞர் மு. இராகவ ஐயங்கார் அவற்றையெல்லாம்
திரட்டிப் பெருந்தொகை என்று பெயரிட்டு இரு தொகுதிகளாக
வெளியிட்டுள்ளார்.