இறையனார் அகப்பொருள் உரையில் மேற்கோள் காட்டப்பெற்றுள்ள ஒரு பாடல் இலக்கியவானில் பேரொளி வீசும் சுடர்மீனாய்ப் பொலிகின்றது. தலைவன், தலைவியின் அருமை பெருமைகளை எடுத்துக்கூறிய பாராட்டுகின்றான். தலைவியைத் தன் உயிராக மதிக்கின்றான். “உயிரைக் கண்ணால் காண இயலாது என்று கூறுபவர்கள் வெட்கமில்லாதவர்கள்; பொய் கூறுகின்றனர். யான் என் உயிரைக் கண்ணால் காணுகின்றேன். என் உயிர் பேசும்; மெல்ல நடக்கும்; மெல்லிய இடையும் குளிர்ந்த கண்ணும் பெருந்தோளும் உடையது அது!” என்று தலைவியைப் போற்றுகின்றான். இக் கருத்துடைய பாடல் கீழே தரப்படுகின்றது: காணா மரபிற்று உயிரென மொழிவோர் நாணிலர் மன்ற பொய்ம்மொழிந் தனரே யாஅம் காண்டும் அரும்பெறல் உயிரே சொல்லும் ஆடும் மென்மெல இயலும் கணைக்கால் நுணுகிய நுசுப்பின் மழைக்கண் மாதர் பணைப்பெருந் தோட்டே. (இறையனார் அகப்பொருளுரை) தமிழ் மொழியில் நகைச்சுவை இலக்கியம் என்று குறிப்பிடத் தக்க தனிநூல் முற்காலத்தில் இல்லை. அங்கங்கே இடம் பெற்றுள்ள பல பாடல்கள் நகைச்சுவை பயப்பனவாய் உள்ளன. யாப்பருங்கல விருத்தியுரை மேற்கோளாகக் காட்டும் செய்யுள் ஒன்று நகைச்சுவைக்கு நல்ல எடுத்துக்காட்டாய் அமைகின்றது. பேய்கள் எல்லாம் கூடித் தம் தலைவியாகிய காளிதேவிக்கு மணம்மிகுந்த சாந்தை அரைக்கின்றன. தேவிக்கு அரைக்கும் சாந்து மிகுந்த மணம் வீசுகின்றது. அத்தகைய உயர்ந்த சாந்தை மிகத் தூய்மையாக, யாரும் தொடாமல் வைத்துப் போற்றுகின்றன பேய்கள். ஒரு பேய்க்கு, மணம் மிகுந்த சாந்தைத் தன் கையால் தொட்டு மோந்துபார்த்து விடவேண்டடும் என்ற ஆவல். தான் சாந்தைத் தொட்டது பிறர்க்குத் தெரிந்து விட்டால் என்ன செய்வது என்ற அச்சம். அதன் நெஞ்சத்தில் ஆசையும் அச்சமும் போராடி முடிவில் ஆசை வென்றுவிடுகின்றது. யாருக்கும் தெரியாமல் தன்கையை நீட்டிச் சாந்தைத் தொட்டுவிடுகின்றது. தொட்டுக்கொண்டு அங்கிருந்து சற்றுத் தொலைவில் சென்று விடுகின்றது. ஆனால், மணம் மிக்க சாந்தின் மணம் அதன் கையிலிருந்து வெளிப்பட்டுப் பரவுகின்றது. மணம் வரும் திசையை மற்றப்பேய்கள் உற்று நோக்குகின்றன. சாந்தைத் தொட்ட பேய் உண்மை வெளிப்பட்டுவிடுமோ என்று நடுங்கி, |