கூர்மையான கத்தி ஒன்றை எடுத்துத் தன் கையை - சாந்தைத் தொட்ட கையை வெட்டி வீழ்த்துகின்றது. கறைப்பல் பெருமோட்டுக் காடுகிழவோட்கு அரைத்திருந்த சாந்தைத் தொட்டப்பேய் மறைக்க அறியாது மற்றுந்தன்கையைக் குறைக்குமாம் கூர்ங்கத்தி கொண்டு (யாப்பருங்கலவிருத்தி - 93) என்ற பாடலில் மேலே கூறிய நிகழ்ச்சி அடங்கியுள்ளது. யாப்பருங்கலக் காரிகையுரை கலித்தாழிசைக்கு உதாரணமாக, திரிபுரம் எரித்த விரிசடைக் கடவுள் ஆடும் ஆட்டத்தைப் புனையும் பாடலைக் காட்டுகின்றது: பூண்ட பறையறையப் பூதம்மருள நீண்ட சடையான் ஆடுமே நீண்ட சடையான் ஆடும்என்ப மாண்ட சாயல் மலைகள் காணவே காணவே. இளம்பூரணர், தொல்காப்பியம் களவியல் பகுதியுரையில் (109), நெறிப்படு நாட்டத்து நிகழ்ந்தவை மறைத்தற்கு உதாரணமாகக் கீழ்வரும் காதல் கவிதையினைக் காட்டியுள்ளார். துறைவன் துறந்தெனத் துறைஇருந்து அழுதஎன் மம்மர் வாண்முகம் நோக்கி அன்னைநின் அவலம் உரைஎன் றனளே கடல்என் பஞ்சாய்ப் பாவை கொண்டு வண்டலம் சிறுமனை சிதைத்தது என்றேனே. (தொல் - கள - 21) போர்க்களத்தில் களிறு எறிதலைச் சிறந்த வீரமாகப் புறப்பொருள் இலக்கியம் புகழும். ஆனால், ஒரு வீரன் போர்க்களிறு ஒன்றை எறிவது தன் ஆண்மைக்கு இழுக்கு என்று கூறுகின்றான்: தானால் விலங்கால் தனித்தால் பிறன்வரைத்தால் யானை எறிதல் இளிவரவால் - யானை ஒருகை உடையது எறிவலோ யானும் இருகை சுமந்துவாழ் வேன். இந்தப் பாடலை நச்சினார்க்கினியர் மேற்கோள் காட்டுகின்றார் (புறத் - 5). போர்க்களத்தில் நால்வகைப் படைகளும் நிற்கின்றன. போர் தொடங்கும் நேரத்து நிகழ்ச்சிகளை, வீரசோழிய உரை மேற்கோள் பாடல் ஒன்று, மிக அழகாகப் பாடுகின்றது. |