பக்கம் எண் :

உரையாசிரியர்கள்70

விளக்கங்களை அடிக்குறிப்பிலும் பிற்சேர்க்கையிலும் தந்துள்ளார். தேவநேய
பாவாணர், கு. சுந்தர மூர்த்தி, பூவராகம் பிள்ளை ஆகியோர் சைவ சித்தாந்த
நூற்பதிப்புக் கழகத்தார் வெளியிட்டுள்ள தொல்காப்பிய உரைகளுக்கு
விளக்கவுரைகளை எழுதியுள்ளனர். மயிலம் சிவலிங்கனார், அடிகள் ஆசிரியர்
ஆகியோர் இளம்பூரணம் எழுத்ததிகாரத்திற்கு விளக்கவுரை எழுதியுள்ளனர்.

செய்யுள் வடிவ உரைகள்

    உரைநடையில் மட்டுமன்றி, செய்யுள் வடிவிலும் சில உரைநூல்கள்
தோன்றின. எல்லாவற்றையும் உரைநடையில் எழுதிக் கற்றுவரும் நமக்கு
இது வியப்பூட்டும் செய்தியாக இருக்கலாம். ஆனால், எல்லாவற்றையும்
மனப்பாடமாகக் கொண்டு கல்வி கற்றுத் தெளிந்த பழங்காலத்தவர்க்கு,
செய்யுள் வடிவில் தோன்றிய உரைநூல் வியப்பினைத் தந்திராது.

     டாக்டர் உ.வே. சாமிநாத ஐயர், செய்யுள் வடிவில் தோன்றிய
உரைகளைப் பற்றிப் பின்வருமாறு கூறுகின்றார்:

     “ஒரு செய்யுள் நூலுக்கு வசனத்தில் உரை இயற்றுவதோடு செய்யுள்
உருவத்திலேயே உரை இயற்றுவதும் உண்டு. இது வட மொழியில்
பெருவழக்கு. தமிழ் நூல்களிலும் சிவஞான போதத்துக்குரிய உதாரண
வெண்பாக்களும், சித்தியார் முதலியனவும் உரைநிலையிலேயே உள்ளன.
தேவாரப் பதிகங்களில் பாசுரம் முதலிய சிலவற்றிக்குப் பெரிய புராணத்தில்
சேக்கிழார் உரை விரித்துச் சொல்கின்றார். இவற்றைப் போலவே
திருக்குறளுக்கும் செய்யுள் உருவத்தில் உரையுண்டு, தனியே குறளுரை
என்னும் பெயர் பெறாவிட்டாலும், அவை உரைகளின் தன்மையை
உடையனவே”*

     அகநானூற்றுக்குப் பழங்காலத்தில், அகவற்பாக்களால் ஆன உரை
ஒன்று இருந்தது. இச்செய்தியினை உரைச் சிறப்புப்பாயிரம், ‘‘‘இத்தொகைக்குக்
கருத்து அகவலாற் பாடினான், இடையள நாட்டு மணக்குடியான் பால்வண்ண
தேவனான வில்லவ தரையன்’’ என்று கூறுவதால் உணரலாம்.

     திருக்குறளுக்குப் பல உரைகள், செய்யுள் உருவில் தோன்றின. குறட்பா
ஒன்றைக்கூறி, அதன் கருத்தை விளக்க, ஏதேனும் ஒரு கதையோ வரலாறோ
உதாரணம் காட்டி, பாடல் இயற்றும் வழக்கம் இலக்கிய உலகில் தோன்றியது.
இத்தகைய


* திருவள்ளுவரும் திருக்குறளும் - பக்கம் 7,8.