நூல்களை ‘உரை நூல்கள்’ என்றே கருதவேண்டும் என்பது டாக்டர் உ.வே. சா. கொள்கையாகும் “இரங்கேச வெண்பா, சிவசிவ வெண்பா, தினகர வெண்பா, வடமலை வெண்பா, சோமேசர் முதுமொழி வெண்பா முதலியன திருக்குறளுக்கு உதாரணம் கூறும் நூல்கள். உரை வகைகளிலே உதாரணம் கூறுதலும் ஒன்று ஆதலின், முற்கூறிய நூல்கள் திருக்குறளின் உரை நூல்கள் என்றே கூறல் தகும்” என்று அவர் கூறுகின்றார். 1 மேலும் சினேந்திர வெண்பா, திருமலை வெண்பா, முதுமொழி மேல்வைப்பு, திருப்புல்லாணி மாலை, திருத்தொண்டர் மாலை, வள்ளுவர் நேரிசை, முருகேசர் முதுநெறி வெண்பா, திருக்குறட் குமரேச வெண்பா ஆகிய நூல்கள் திருக்குறளுக்கு உதாரணம் கூறும் வகையில் எழுந்துள்ளன. குமர குருபரரின் நீதி நெறி விளக்கமும் திருக்குறள் கருத்தைச் சுருங்கிய வடிவில் தரும் நூல் ஆகும். இவையேயன்றி, பழைய விருத்த நூல் ஒன்றும் உள்ளது. அண்மைக் காலத்தில், திருக்குறள் அகவல் குட்டிக்குறள் திருக்குறள் இசைமாலை ஆகியவையும் செய்யுள் உருவில் திருக்குறளுக்கு உரை நூல்களாகத் தோன்றியுள்ளன. 15-ஆம் நூற்றாண்டின் இறுதியில், ஆண்டிப் புலவர் நன்னூலுக்கு விருத்தப்பாவில் ஓர் உரை இயற்றினார். இவர் ‘ஆசிரிய நிகண்டு’ இயற்றியவர். இதனை, ‘இயம்பிய நிகண்டின் உரையறி நன்னூலினொடு இரண்டுமே செய்து வைத்தான்” என்று ஆசிரிய நிகண்டின் பாயிரம் குறிப்பிடுகின்றது. ‘உரையறி நன்னூல், என்பது உரையைக் குறிக்கும். அது ஆசிரிய விருத்தத்தால் ஆனது.2 சிவஞான சித்தியாருக்கு, குருஞான சம்பந்தர் செய்யுள் வடிவில் ‘ஞானாவரண விளக்கம்’ என்ற பெயரில் சூத்திரக் கருத்துகளை விளக்கி எழுதினார். பாவேந்தர் பாரதிதாசன், குறுந்தொகைப் பாடல்கள் சிலவற்றை, இக்காலத்தவர் எளிதில் பொருள் உணர்ந்து கற்கும் வகையில் அகவற்பாக்களில் தந்துள்ளார். அவற்றைப் பாரதிதாசன் கவிதைகள் இரண்டாம் தொகுதியில் காணலாம். கவிஞர் கண்ணதாசன் முத்தொள்ளாயிரப் பாடல்கள் சிலவற்றிற்குச் செய்யுள் வடிவில் விளக்கம் தந்துள்ளார். 1. திருவள்ளுவரும் திருக்குறளும் (பக்கம் 8) 2. தமிழ்ப் புலவர் வரலாறு (13-நூல்) 1956. பக்கம் 15-16. |