பக்கம் எண் :

உரையாசிரியர்கள்72

     மு.ரா. பெருமாள் முதலியார் நற்றிணை குறுந்தொகை அகநானூறு
ஆகியவற்றிற்கு அகவற்பாவில் உரை எழுதியுள்ளார்.

     இவையாவும் பழஞ்செய்யுட்களுக்கு இக்காலத்தவர் செய்யுள் வடிவில்
எழுதிய உரைகள் ஆகும்.

நூலாசிரியரே எழுதிய உரைகள்.

    ஒருவர் எழுதிய நூலுக்கு பிறர் உரை எழுதிய மரபு போய்,
நூலாசிரியரே உரை எழுதும் வழக்கமும் ஏற்பட்டது. பல உரைகள்
தோன்றியும், ஒரு நூல் நன்கு விளங்காமல் இருந்த நிலையைக் கண்ட
நூலாசிரியர்கள் சிலர் தம் நூலுக்குத் தாமே உரை எழுதி இருக்கலாம்.
நூலாசிரியர் காலத்திலேயே அவர் நூல், பிறழ உணரப்பட்டதைக் கண்டு
நூலாசிரியரே உரையையும் எழுதியிருக்கலாம்.

     நூலாசிரியரே உரை எழுதும் வழக்கம் வடமொழியாளரிடம் உண்டு.
இதனை, “வடநூலார் தாமே பதிகமும் உரையும் செய்வார்” என்று பிரயோக
விவேகம் கூறுகின்றது (காரக படலம் 3).

     தமிழ் மொழியில், நூலாசிரியரே உரை எழுதும் வழக்கத்திற்குக்
கால்கோள் செய்தவர் புறப்பொருள் வெண்பாமாலை இயற்றிய ஐயனாரிதனார்
என்னலாம். அவர், புறப்பொருள் இலக்கணத்தைக் கூறும் சூத்திரங்கள் எழுதி,
அவற்றின் கீழே துறைகளை விளக்கும் கொளுக்களை அமைத்து, ஒவ்வொரு
துறையினையும் விளக்கும் வெண்பா ஒன்றையும் (மருட்பாவும் உண்டு)
இயற்றியுள்ளார்; தாம் வகுத்த புறப்பொருள் இலக்கணத்திற்குத் தாமே
இலக்கிய மேற்கோளையும் அமைத்துள்ளார். இவ்வாறே கி.பி. 12-ஆம்
நூற்றாண்டில் தோன்றிய தண்டியலங்கார ஆசிரியர், அணியிலக்கணத்திற்கு
ஏற்ற உதாரணச் செய்யுள்களை இயற்றித் தம் நூலில் சேர்ந்துள்ளார். இதனை,
“தண்டியாசிரியர் மூலோதாரணம் காட்டினாற்போல, யாமும் உரை எழுதியது
அல்லது மூலோதாரணமும் காட்டினாம்” என்று பிரயோக விவேகம்
கூறுகின்றது (பிரயோக-காரக படலம் 3).

     கி.பி. 13-ஆம் நூற்றாண்டின் இறுதியில் நாற்கவிராசநம்பி ‘அகப்பொருள்
விளக்கம்’ என்னும் இலக்கண நூலை இயற்றித் தாமே உரையும் எழுதினார்.
இச்செய்தியை அந்நூலின் சிறப்புப் பாயிரம்,

          அகப்பொருள் விளக்கம்என்று அதற்கொரு நாமம்
         புலப்படுத்து இருளறப் பொருள்விரித்து எழுதினன்

என்று கூறுவதால் அறியலாம்.