17-ஆம் நூற்றாண்டின் இறுதியில் வாழ்ந்த சுப்பிரமணிய தீட்சிதர், பிரயோக விவேகம் என்னும் இலக்கண நூலை இயற்றி, தாமே அதற்கு உரையும் எழுதினார், அவர், “வடநூலார் தாமே பதிகமும் உரையும் செய்வார். இந்நூலும் வட நூலைத் தற்பவமாகச் செய்தலான், யாமும் பதிகமும் உரையும் செய்து உதாரணமும் காட்டினோம்” என்று கூறுகின்றார் (பிரயோக, காரக படம் - 3). இவ்வாறே, இலக்கண விளக்கம் இயற்றிய வைத்திய நாததேசிகரும், இலக்கணக் கொத்து இயற்றிய சாமிநாத தேசிகரும் தம் நூல்களுக்குத் தாமே உரை எழுதியுள்ளனர். இலக்கணக் கொத்தின் ஆசிரியரான சாமிநாத தேசிகர், நூல்செய் தவன்அந் நூற்குஉரை எழுதுதல் முறையோ எனிலே அறையக் கேள்நீ என்று வினாவும் விடையுமாகத் தொடங்கித் தம் கருத்துகளை விரித்துரைக்கின்றார்: முன்பின் பலரே ! என்கண் காணத் திருவா ரூரில் திருக்கூட் டத்தில் தமிழுக்கு இலக்கு ஆகிய வயித்திய நாதன் இலக்கண விளக்கம் வகுத்துஉரை எழுதினன்; அன்றியும் தென்திசை ஆழ்வார் திருநகர் அப்பதி வாழும் சுப்பிர மணிய வேதியன் தமிழ்ப்பிர யோக விவேகம் உய்த்துஉரை எழுதினன்; ஒன்றே பலவே ! (இலக் - 7) என்று நூலாசிரியரே உரை எழுதியுள்ளதைக் கூறித் தாமும் அவ்வாறே செய்ததாகக் கூறுகின்றார். தமிழறிஞர் ரா. இராகவ ஐயங்கார், பாரி காதை என்னும் இனிய இலக்கியத்தை வெண்பாக்களால் படைத்து, அதற்குச் சிறந்ததொரு உரையும் இயற்றியுள்ளார். பாவேந்தர் பாரதிதாசன், புதிய ஆத்திசூடி ஒன்றை எழுதி அவரே அதற்கு உரையும் விளக்கமும் எழுதியுள்ளார். செகவீரபாண்டியனார் ‘குமரேச வெண்பா’ என்னும் நூல் இயற்றி, அதற்குத் தாமே உரையும் செய்துள்ளார். நூலாசிரியரே உரையையும் எழுதிவிடுவதால் உண்டாகும் நன்மை தீமைகளைச் சற்றுக் கருதுவோம்: நூலாசிரியரே தம் கருத்தைத் தாமே இது என்று திட்டவட்டமாக விளக்கி விடுகின்றார். பின் வருவோர் தம் கருத்தை |