பக்கம் எண் :

உரையாசிரியர்கள்74

மாறுபடக்கொள்வாரோ, தாம் கூறியுள்ள அரிய கருத்து விளங்காமல்
போய்விடுமோ என்று நூலாசிரியர் அஞ்சியதாலேயே இவ்வாறு உரை
எழுதினார். ஆதலின், அவரது நோக்கம் நிறைவேறியது என்னலாம்.
இவற்றை நன்மைகள் என்று குறிப்பிடலாம்.

     நூலாசிரியரே உரை எழுதிவிட்டால், கட்டி முடித்த கட்டடம்போல்,
உரை வளர்ச்சி நின்றுவிடும். மற்றோர் உரை தோன்ற வாய்ப்பு இல்லை.
நூலைப் படிப்பவர்களுக்கு வேறுவகையான விளக்கமோ, கருத்தோ
தோன்றினாலும் அவற்றைக்கொள்ளத் தடையாக இருக்கும். காலந்தோறும்
தோன்றும் புதிய கருத்திற்கு அந்நூலில் இடமில்லை என்ற எண்ணம்
தோன்றும். நூலின் சிறப்பு, பாடலின் நயம், கருத்தழகு ஆகியவற்றை
நூலாசிரியரே வியந்து, தம் உரையில் பாராட்டிக் கொள்வது சிறப்பாக
இருக்காது. தம் புலமை மாண்பைத் தாமே பாராட்டிக்கூறும் ஆசிரியரை
உலகம் எள்ளி நகைக்கும், மேலும் நூல் எழுதும் ஆசிரியர், நயங்களையும்,
சிறப்புகளையும் கருதிப் பாடல் இயற்றுவதில்லை.

     இவற்றை எல்லாம் நோக்கும்போது, நூலாசிரியரே உரை எழுதுவதால்
பயன் மிகுதியாக இல்லை என்னலாம்.

மறுப்புரை

    உரையாசிரியர்கள், தமக்கு முன் உரை எழுதியவர் கூறியுள்ள வேறுபட்ட
கருத்திற்கு மறுப்புரை கூறி, தம்கருத்தை நிலைநாட்டுவது வழக்கம். ஆனால்,
ஒரு நூலை எதிர்த்து - அதன் கொள்கையை மறுத்து - அந்நூல் இயற்றிய
ஆசிரியர் கருத்தைத் தாக்கி, தமிழில் ஓர் மறுப்புரை நூல் தோன்றியது.

     திருவாரூர் வைத்தியநாத தேசிகர் எழுதிய ‘இலக்கண விளக்கம்’
என்னும் நூலை மறுத்து, சிவஞான முனிவர் (18ஆம் நூற். இறுதி) ‘இலக்கண
விளக்கச் சூறாவளி’ என்னும் பெயருடன் மறுப்புரை எழுதினார். விளக்கம்
என்பதற்கு. விளக்கு (விளக்கு + அம்) என்பது பொருள். சூறாவளி என்பது
சுழன்று வீசும் கடு்ங்காற்று. வைத்தியநாத தேசிகர் ஏற்றிவைத்த இலக்கண
விளக்கை அணைக்க, சிவஞான முனிவர் சூறைக்காற்றை - சூறாவளியைக்
கிளப்பினார். இந்த மறுப்புரை நூலை, தமிழறிஞர் சி. வை. தாமோதரம்
பிள்ளை’ அநியாய கண்டனம்’ என்று கூறியுள்ளார். தமிழில், ஒரு நூலை
எதிர்த்து எழுதிய மறுப்புரை நூல் இஃது ஒன்றேயாகும்.