வசனம் இராமாயணம் பாரதம் கந்தபுராணம் முதலிய புராண இதிகாசக் கதைகளைப் பொது மக்களிடையே பரப்பும் முயற்சியில் ஈடுபட்டவர்கள், பழங்கதை கூறும் வசனநூல்களை இயற்றினர். சிறிதளவு பழஞ்செய்யுள்களைக் கற்று இன்புற இயலாதவர்களும் பயனடையும் பொருட்டு, காப்பியங்களில் உள்ள செய்யுள்களின் கருத்தைத் தொகுத்து வழங்கினர் சிலர். இத்தகைய முயற்சி 19 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலேயே தொடங்கி இன்றும் பயனளித்து வருகின்றது. இந்த நன்முயற்சியின் பயனாய், சிறந்த காப்பியக் கதைகள், கவிஞர்களின் செய்யுள்நலங்களோடு உரைநடையில் கிடைத்தன. பாடல்களின் கருத்தை மாற்றாமல் - கூட்டாமல் - குறைக்காமல் கதைப் போக்கைத் தழுவிப் பொழிப்புரை ஏற்பட்டதால், பெரும்பயன் விளைந்தது. காப்பியமும் புராண இதிகாசங்களும் மக்களிடையே நன்கு பரவின. ஆர்வமிகுதியால் மூல நூல்களை - பழம் பாடல்களைக் கற்றுப் புலமை பெற்றனர். பொழிப்புரைகளாகிய வசன நூல்கள், காப்பிய மாளிகைகளின் மேலே ஏறிப் பார்த்து மகிழ உதவுகின்ற ஏணிகள் ஆயின. சங்க நூல்களாகிய எட்டுத் தொகையும் பத்துப் பாட்டும் ஒவ்வொன்றாக வெளியானபோது, யாழ்ப்பாணத்துத் தமிழறிஞர் ந. சி. கந்தையா பிள்ளை அந்நூல்களுக்கு வசனம் எழுதி, தமிழ் கற்கும் மாணவர்களுக்கு உதவி செய்தார். உரை எழுதாக் கொள்கை பக்தி நூல்களுக்கு உரை எழுதுதல் கூடாது என்ற கொள்கை தமிழகத்தில் பல ஆண்டுகளாக இருந்து வந்தது. ஆழ்வார்கள் அருளிய பக்திப் பாடல்களுக்கு உரை எழுதும் முயற்சி தோன்றியபோது, அக்காலத்தில் இருந்த வைணவப் பெரியோர்கள் அம்முயற்சியைக் கண்டித்தனர்; தடுத்தனர். இருப்பினும், மக்களிடையே வைணவச் சான்றோர்கள் பக்திப் பாடல்களுக்குக் கூறி வந்த விளக்கங்களைத் தாம் கேட்டவாறே ‘கால் கொம்பு சுழி ஏறாமல்’ எழுதி வைத்தனர். இவ்வாறு வைணவ நூல்களுக்கு உரையும் விளக்கமும் வாய்த்து விட்டன. சைவ சமய நூல்களுக்கு இத்தகைய முயற்சி பழங்காலத்தில் மேற்கொள்ளப்படவில்லை. கற்றறிந்த சைவப் பெரியோர்களும், “அருட்பாடல்களுக்கு நாமா உரை எழுதுவது?” என்று தயங்கி ஒதுங்கி விட்டனர். இதனால், சைவ சமயப் பக்திப் பாடல்கள் உரையின்றியே ஓதப்பட்டு வந்தன. இருபதாம் நூற்றாண்டில், |