பக்கம் எண் :

உரையாசிரியர்கள்76

எல்லோரும் அருட்பாடல்களைப் படித்துப் பயன்பெற வேண்டும் என்று
அறிஞர் சிலர் முயன்று உரை கண்டுள்ளனர்.

தொகுத்துக் காணுதல்

     ஒரு நூலுக்கு வழங்கிய பலவேறு உரைகளையும் தொகுத்துக் காண
வேண்டும் என்ற ஆர்வம் இக் காலத்தில் ஏற்பட்டுள்ளது; பலருடைய
கருத்துக்களையும் ஒரே இடத்தில் காணும் வேட்கை பிறந்துள்ளது. உரை
வேற்றுமைகளைக் கண்டு நல்லனவற்றையும் அல்லனவற்றையும் சீர் தூக்கும்
நோக்கம் வளர்ந்து வருகிறது. செல்வாக்கு உடையவர்களின் சொல்லை
அப்படியே ஏற்கும் நிலை மாறி நல்லது எது, சிறந்தது எது, பொருத்தமானது
எது என்று ஆராயும் திறன் பெருகி வருகின்றது. புகழ்பெற்ற
உரையாசிரியர்களின் பொருந்தாத கருத்துக்களை மறுக்கும் துணிவு
தலைதூக்கியுள்ளது. யார் சொல்லுகிறார்கள் என்று பார்க்கும் நிலைமை மாறி,
என்ன சொல்லுகிறார்கள் என்று நுணுகி நோக்கும் நிலை ஏற்பட்டு வருகிறது.

     திறக்குறளுக்கு உள்ள பழைய உரைகளைத் தொகுத்து, உரைவளம்,
உரைக்கொத்து, உரை வேற்றுமை ஆகிய பயனுள்ள நூல்கள்
வெளிவந்துள்ளன. நாலடியார் உரை வளம் ஒன்றும் வெளிவந்துள்ளது.
தொல்காப்பிய உரைவளம் வெளிவந்துள்ளது. இவ்வாறே நன்னூல், சிவஞான
போதம், சித்தியார் போன்ற நூல்களுக்கும் உரைவளம் வெளிவரவேண்டும்.
இப்பணியினைப் பல்கலைக் கழகங்களும் தமிழ் வளர்க்கும் நிலையங்களும்
மேற்கொள்ள வேண்டும்.

புதிய முயற்சிகள்

     இக்காலத்தில் பழம்பெரும் நூல்களுக்கு மிக எளிய உரைகள் எழுதி
அவற்றை மக்களிடம் பரப்பும் முயற்சி நடைபெறுகிறது. இம் முயற்சி
செயலாக மலர்ந்து பெரிதும் வெற்றி பெற்றுவிட்டது.

     பழைய உரைகளைத் திருத்தமாக வெளியிடுதல், உரையில் வழுவுள்ள
இடங்களை ஆராய்ந்து உண்மை உரைகாணுதல், சிறந்த பாடம் கண்டு
போற்றுதல், உரைக்கு விளக்கம் தரல், கடினமான உரைப் பகுதிக்கு எளிய
நடையில் விளக்கம் எழுதுதல் போன்ற நல்ல முயற்சிகள் நடை பெறுகின்றன.
மாணவர்க்கு ஏற்ற வகையில் அடிக்குறிப்பும், வினாவிடைகளும் அமைத்துத்
தரல்; உரையில் வந்துள்ள நயமான பகுதி, உவமைகள், மேற்கோள்,
பழமொழி ஆகியவற்றைத் திரட்டித் தருதல் போன்ற பயனுள்ள பணிகளும்
நடைபெற்று வருகின்றன.