பக்கம் எண் :

77அறிமுகம்

     எதையும் எளிதாக விரைவில்பெற நினைக்கும் மக்களின் மனநிலை,
பரபரப்பான வாழ்க்கை முறை, ஆழ்ந்து சிந்தித்துத் தெளிய வாய்ப்பில்லாத
சுற்றுச் சூழல், பலவேறு செய்திகளையும் அறிந்திருக்க வேண்டிய நெருக்கடி
ஆகியவற்றை நோக்கும்போது, இக் காலத்துப் புதிய முயற்சிகள் பெரிதும்
பயனுள்ளவை என்பது விளங்கும்.

2. உரையாசிரியர்கள்

     காலந்தோறும் மிகப்பலர், இலக்கிய இலக்கண நூல்களைக் கற்பதில்
மிகுந்த ஆர்வமுடையோராய் இருந்திருக்கின்றனர்; புலமை விருந்து நாடிப்
புதுப்புது நூல்களைத் தேடி நுகர்ந்திருக்கின்றனர்; அறிதோறும் அறியாமை
கண்டும் நவில்தொறும் நூல் நயத்தில் திளைத்தும் தம்மை மறந்திருக்கின்றனர்;
கருத்துகளைச் சமன் செய்து சீர்தூக்கி ஆராய்ந்திருக்கின்றனர். ஆனால்
அவர்களில் பலர், தம் அனுபவங்களை எழுதி வைக்கவில்லை; இலக்கியச்
சுவையை வெளிப்படுத்தி நூலியற்றவில்லை; ஆராய்ச்சிக்கு வடிவம்
தரவில்லை. சிலர் மட்டுமே புலமை உலகில் தமக்கு ஏற்பட்ட இன்ப
அனுபவங்களை எழுதி வைத்தனர்; இலக்கியச் சுவையை வெளிப்படுத்தி
நூலியற்றினர்; தம் ஆராய்ச்சிக்கு வடிவம் தந்தனர்.

     இரண்டாம் வகையினரே உரையாசிரியர்கள்.

     “இவ்வுலகில் முழுமை அடைந்தவர்கள் இரு வகையினர் ஆவர்.
உண்மையை அறிந்து பின் பிறரைப் பற்றிய சிந்தனையில்லாமல் தாம் மட்டும்
அவ்வுண்மையை நுகர்ந்து கொண்டு வாளா இருப்பவர் ஒரு சாரார். அறியப்
பெற்ற உண்மையைத் தாம் மட்டும் நுகர்வதில் மகிழ்வடையாமல், ‘எம்மோடு
உண்மையை அனுபவிக்க வாருங்கள்’ என்று மற்றவரையும் கூவி அழைக்கும்
இயல்புடையோர் இன்னொரு சாரார்” என்று இராமகிருஷ்ண பரமஹம்சர்
கூறியுள்ள கருத்து இங்கே நினைவுக்கு வருகின்றது.*

        உரையாசிரியர்கள், ‘யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்’
என்று உலக மக்களை அறைகூவி அழைத்துப் புலமை விருந்தளித்த
நல்லவர்கள்; அறிவுச் செல்வத்தை அள்ளிச் சொரிந்த வள்ளல்கள்; கல்விக்
கோயிலின் பெருவாயிலைத் திறந்துவிட்ட மேலோர்கள்.


* வாழ்க்கை விளக்கு - பக். 67, 68, டாக்டர் கு. தாமோதரன்.