பக்கம் எண் :

உரையாசிரியர்கள்78

பொலியக் கோத்த புலமை

    இளங்கோவடிகள் (அரங்கேற்று காதையில் - 94) யாழாசிரியனை,

     பொலியக் கோத்த புலமையோன் என்று குறிப்பிடுகின்றார். ‘பொலியக்
கோத்த புலமை’  என்னும் அழகிய தொடர், சிந்தனைக்கு விருந்தாய்
அமைகின்றது.

     உரையாசிரியர்கள் அனைவரும் பொலியக்கோத்த புலமையாளர்கள்.
அவர்கள் தம் வாழ்நாளின் முற்பகுதியை நல்ல நூல்கள் பலவற்றைத்
தேடிக்கற்பதிலும் அவற்றின் பொருளைத் தெளிவாக உணர்வதிலும்
செலவிட்டுப் பெரும் புலமை பெற்ற பின், தம் வாழ்நாளின் பிற்பகுதியில்,
சிறந்த நூல் ஒன்றைத் தேர்ந்தெடுத்துக் கொண்டு அதற்கு ஒப்பற்ற உரை
காண்பதில் ஈடுபட்டுத் தொண்டு புரிந்து தம் வாழ்நாளைப் பயனுள்ள
முறையில் கழித்தனர்.

     “ஒரு நூலின் கருத்தையோ பாட்டின் பொருளையோ காண்பதற்குப்
பல அறிவுக்கூறுகள் வேண்டும். இது இன்ன காலத்துத் தோன்றிய நூல்
என்ற கால அறிவும், இக்காலத்து இச் சொல்லுக்கு இப் பொருள் என்ற
சொல்லறிவும், இன்ன காலத்து இருந்த பழக்க வழக்கங்கள் இவை என்ற
சமுதாய அறிவும், இத்தொடர் ஓடிக்கிடக்கும் முறை இது என்ற
நடையறிவும்,
இன்ன பிறவும் இருந்தால்தான் பொருளை முரணின்றிக்
காண முடியும்.”*

     இத்தகைய பல துறை அறிவுக்கூறுகள், எல்லா உரையாசிரியர்களிடமும்
உள்ளன. அவர்களின் பல்கலைப் புலமை, அகராதிக் கலையாக-இலக்கண
ஆராய்ச்சியாக-இலக்கியச் சுவையாக-திருத்தமான பாடங்காணும்
திறனாய்வாக-சமயக் கருத்தாக-வாய்மொழி இலக்கிய ஊற்றாக-நாகரிகம்
பண்பாடு பழக்க வழக்கம் ஆகியவற்றை வெளிப்படுத்தும் காலத்தின்
குரலாக-போலி உரைக்கு எதிர்ப்புக் குரலாக-நாட்டு வரலாறாக
வெளிப்படுகின்றது.

வானவில்

    பலவகையான வண்ணங்கள் வானவில்லில் அமைந்து, காணும்தோறும்
களிப்பூட்டுவதுபோல், உரையாசிரியர்களிடம் உள்ள பலவகையான புலமைத்
திறன்கள் நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றன. உரையாசிரியர்களில் சிலர்
நூலாசிரியராய் இருந்தனர்; கற்பிக்கும் நல்லாசிரியராய் விளங்கினர்; அறிவுக்


* டாக்டர் வ. சுப. மாணிக்கம் சிந்தனைக் களங்கள் (1975) பக். 313