பக்கம் எண் :

79அறிமுகம்

கொடை வழங்கிய ஞான ஆசிரியராய்த் திகழ்ந்தனர். மகாவித்துவான்
மீனாட்சி சுந்தரம் பிள்ளை சேக்கிழாரை,

          நாடிய விரிநூல் சொற்றிடு திறனால்
              நன் நூலா சிரியன்;
        
நகுபாசுர முதல் உரை செய்தலினால்
              நவில் உரை யாசிரியன்;
        
நீடிய பரசம யக்குழி வீழ்ந்தவர்
              நீப்பப் போதனைசெய்
          நிலையாற் போத காசிரியன்; இவை
              நிகழ்தொறும் நிகழ்தொறும்
          ஆடிய ஞானத் திறன் உறலான்
              ஞானா சிரியனும் நீ!*

என்று போற்றுகின்றார். சிவஞான முனிவரும் இத்தகைய பாராட்டுதலுக்கு
உரியவர்.

     இருபதாம் நூற்றாண்டு உரையாசிரியர்களில் பலர், பதிப்பாசிரியராய் -
கற்பிக்கும் நல்லாசிரியராய் - திறனாய்வாளராய் விளங்கினர். பட்டை தீட்டிய
வைரம் போல், அவர்கள் பல வேறு திறன்களை வெளிப்படுத்தி
ஒளிவீசுகின்றனர்;  ஐந்து உலோகத்தால் ஆன கலைத்திறன் வாய்ந்த
சிலைகளைப் போல் அவர்கள் பளிச்சிடுகின்றனர். ஒவ்வோர் உரையாசிரியரும்,

          தமிழே, நீ ஓர்
         பூக்காடு ! நான் ஓர் தும்பி !

என்று வியந்து பாடிக் கொண்டே, தமிழச் சோலைக்குள் புகுந்து
இலக்கியத்தேன் நுகர்ந்து, தேனைத் திரட்டித் தந்துள்ளார்.

     பரஞ்சோதியார், தென்றலுக்கு அறிஞரை உவமை கூறுகின்றார்;

          பொங்கரின் நுழைந்து, வாவி
             புகுந்து, பங்கயம் துழாவி,
         பைங்கடி மயிலை முல்லை
             மல்லிகைப் பந்தர் தாவி,
         கொங்கலர் மணம்கூட் டுண்டு,
             குளிர்ந்து மெல்லென்று தென்றல்
         அங்கங்கே கலைகள் தேரும்
             அறிவன்போல் இயங்கும் அன்றே.

எங்கெங்கே சென்றாலும், அங்கங்கே கலைகளை ஆராய்கின்ற
அறிஞரைப்போல் தென்றல், சோலைக்குள் புகுந்து தாமரைத்


* சேக்கிழார் பிள்ளைத் தமிழ் - சப்பாணிப் பருவம், 9.