பக்கம் எண் :

703நோக்கு

எழுத்துக்களுடன், எளிதில் படித்துப் புரிந்து கொள்ளும் வகையில் அமைந்த
பத்திப் பிரிவுகளுடன் விளங்குகின்றன. இந்த வடிவத்தைப் பழைய உரை
நூல்கள் பெறுமுன்னர் எத்தனையோ இடர்பாடுகளைக் கடந்து வந்துள்ளன.

     அச்சுக்கலை தோன்றாத காலத்தின் நிலையை நினைத்துப்
பார்க்கும்போது, எழுதும் கலை எவ்வளவு அரிதாக இருந்திருக்கும் என்பது
விளங்கும். பனையோலைகளில் எழுத்தாணியின் உதவியால், பல நூறு
பக்கங்களைக்கொண்ட நூல்களை, எண்ணெய் விளக்கின் முன்னால்
உட்கார்ந்து கொண்டு கைவலிக்க எழுதியவர்களைப் பெருந்தொண்டர்கள்
என்று போற்ற வேண்டும். எழுதி எழுதிக் குவித்த ஏடுகளை நினைவோடு
ஒன்றன்பின் ஒன்றாக அடுக்கித் துளையிட்டு, கயிறுகட்டி மேலே சட்டம்
சேர்ந்து வைத்தவர்களை மதிக்க வேண்டும். எழுத்துக்களின் மீது மை தடவி
எளிதில் படிக்கும் நிலையில் வைத்துக் காத்தவர்களை என்றும் நினைக்க
வேண்டும்.

     முற்காலத்து ஏடுகளின் நிலையையும் அவற்றைப் போற்றிய
வகையினையும்,

    எழுதுவரிக் கோலத்தார் ஈவார்க் குரியார்
    தொழுதிமைக் கண்ணணைந்த தோட்டார் - முழுதகலா
    நாணிற் செறிந்தார் நலங்கிள்ளி நாடோறும்
    பேணற் கமைந்தார் பெரிது

என்ற வெண்பா உணர்த்துகின்றது.

     தமிழ்விடுதூது தமிழ் மொழியை,

    பள்ளிக்கூ டத்துஅசையாம்* பற்பலதொட் டிற்கிடத்தித்
    தள்ளிச் சிறார்கூடித் தலாட்டி - உள்ளிலகு
    மஞ்சள் குளிப்பாட்டி மையிட்டு முப்பாலும்
    மிஞ்சப் புகட்ட மிகவளர்ந்தாய்

என்று போற்றுகின்றது. தமிழ்ச் சுவடிகளைப் பேணி வைத்திருந்த முறை
இதனால் விளங்குகின்றது.

     இவ்வளவு கண்ணும் கருத்துமாகச் சுவடிகளை எழுதிக் காத்துவந்த
போதும், பழங்கால ஏடுகளில் குறைபாடுகள் நேராமல் இல்லை. ஏடு
எழுதியவர்களில் சிலர் போதிய அளவு கல்விப் பயிற்சி இல்லாதவர்கள்;
சிறிதளவே கற்றுக் கூலிக்கு எழுதியவர்கள். அதனால் ஏடுகளில். பிழைகள்
ஏற்பட்டன. கற்றறிந்தவர்களும் விரைவு. கவனக்குறைவு, வேலையின் கடுமை,
உடற்சோர்வு, மறதி ஆகியவை காரணமாகப் பிழை


 * அசை - சுவடி தூக்கும் பலகை.