செய்திருத்தலுங் கூடும். ஒருவர் மூல ஏட்டைப் படிக்க மற்றொருவர் கேட்டு எழுதியதும் உண்டு. படிப்பவர் தவறாகப் படித்தாலும் அதைக்கேட்டு எழுதுபவர் அப்படியே எழுதிவிடுவார். பிறர் உதவியின்றித் தாமே ஏடு எழுதியவரும், பிறர் எழுதுவதற்காக ஏடு படித்தவரும் பிழை செய்ததைப்பற்றி முற்காலத்தில் ஒரு பழமொழி எழுந்தது. ‘எழுதியவன் ஏட்டைக் கெடுத்தான்; படித்தவன் பாட்டைக் கெடுத்தான்’ என்ற பழமொழி அக்காலத் தமிழ் மக்களிடம் தோன்றி வழங்கியது. ஏடு எழுதியவர்கள் தம் குறைபாடுகளை உணராமல் இல்லை. தாம் படி எடுத்த ஏட்டுச் சுவடியின் முடிவில், ஓராது எழுதினேன் ஒண்பொருளை ஆராய்ந்து கொள்க அறிவுடையார் - சீராய்ந்து குற்றம் களைந்து குறைபெய்து வாசித்தல் கற்றறிந்த மாந்தர் கடன் 1 என்று எழுதியுள்ளனர். “அச்சுப் புத்தங்களைவிட ஏட்டுச் சுவடிகள் அதிக விலை பெற்றன. பொருள் உள்ளவர் மட்டும் ஏட்டுச் சுவடியை ஏடெழுதுவோருக்குப் பொருள் கொடுத்து எழுதிக் கொள்ள முடியும். பொருள் இல்லாதவர் பிரதி செய்ய முடியாது. இதனால் பண்டைக் காலத்தில் இருந்த சமண சமயத்தார் (ஜைனர்) சாஸ்திர தானம் என்னும் ஒரு தானத்தை ஏற்படுத்தியிருந்தார்கள். செல்வர்களான சமன சமயத்தவர் வீடுகளில் திருமணம் முதலிய சிறப்புகள் நடைபெறும்போது தமது சமய நூல்களைப் பல பிரதிகள் எழுதுவித்து, அப் பிரதிகளைத் தகுந்தவர்களுக்குத் தானமான வழங்கினார்கள். இதற்குத்தான் ‘சாஸ்திரதானம்’ என்று பெயர். பண்டைக் காலத்தில் செல்வர்கள்தான் பெரும்பொருள் செலவிட்டுப் புத்தகச்சாலை அமைக்க முடியும்”2 செல்வர்கள் பொருட்செலவை நோக்காது பல அரிய நூல்களை எழுதித் தொகுத்து வைத்துப் போற்றிக் காத்து வந்தனர். அவற்றைப் படித்துப் பயன் பெறுமாறு புலவர்களுக்கு உரிமை அளித்தனர். நாலடியாரில் உள்ள, புத்தகமே சாலத் தொகுத்தும் பொருள்தெரியார் உய்த்தகம் எல்லாம் நிறைப்பினும் - மற்றவற்றைப் போற்றும் புலவரும் வேறே பொருள்தெரிந்து தேற்றும் புலவரும் வேறு (நாலடியார் - 318) 1. இவ்வெண்பா, சீவக சிந்தாமணியின் ஏட்டுப் பிரதிகள் சிலவற்றின் இறுதியில் இருந்ததாக டாக்டர் உ.வே. சா. குறிப்பிட்டுள்ளார்கள். 2. பத்தொன்பதாம் நூற்றாண்டின் தமிழிலக்கியம் பக். 113, 114. |