என்ற செய்யுள் அக் காலத்தில் செல்வர்களின் வீட்டில் நூல் நிலையம் இருந்ததையும், அந்நூல் நிலையத்தைப் பயன்படுத்துவோர் இருந்ததையும் தெளிவாகக் குறிப்பிடுகின்றது. பல புத்தங்களைத் தொகுத்து வைத்திருந்த செல்வர்கள் அவற்றை எடுத்துத்தரவும், வைக்கவும் பணியாட்களை வைத்திருந்தனர். இளம்பூரணரும் மயிலைநாதரும் தம் உரைகளில் ‘மற்றையது’ என்றும் சொல் இனம் குறிக்கும் என்பதற்கு, “பல பொத்தகம் கிடந்தவழி ஒருவன் ஏவலாளனைப் பார்த்து, ‘பொத்தகம் கொண்டுவா’ என்றால் அவன் ஒரு பொத்தகம் கொண்டுவந்த விடத்துத் தான் கருதிய பொத்தகம் அன்றெனில், ‘மற்றையது கொணா’ என்னும்” என்று உதாரணம் கூறியுள்ளனர். (தொல், சொல் - இடையியல் - 16 இளம் உரை; நன் - 432). தொகுத்து வைத்திருந்ததோடு செல்லுமிடம் எங்கும் சுவடிகளைத் தம கையில் எடுத்துச் சென்றனர்; ‘பாடம் ஏறினும் ஏடது கைவிடல்’ என்ற பழமொழி இதனை உணர்த்தும். இவ்வாறு போற்றி வைக்கப்பட்ட ஏடுகள், பல தலைமுறைகளைத் தாண்டி வந்து, இன்று சிலருடைய அரிய முயற்சியால் தொகுத்து வைக்கப்பட்டுள்ளன. அத்தகைய இடங்கள் சிலவற்றைக் குறிப்பிடுவோம். தஞ்சை சரசுவதி மகால், மதுரைத் தமிழச் சங்கம், சென்னை அரசாங்கச் சுவடி நிலையம். திருவாவடுதுறை தருமபுர மடங்கள், திருவனந்தபுரம் அரண்மனை நூலகம், கேரளப் பல்கலைக் கழகச் சுவடி நூல் நிலையம், அண்ணாமலைப் பல்கலைக்கழகம், திருப்பதி வேங்கடேசுவரா பல்கலைக் கழகம், கரந்தைத் தமிழ்ச் சங்கம், டாக்டர் உ.வே.சா. ஐயர் நூல் நிலையம், சைவ சித்தாந்த சமாஜம், பவானந்தர் கழகம், யாழ்ப்பாணம் தாமோதரம் பிள்ளை பதிப்பு நிலையம் ஆகியவற்றைக் குறிப்பிடலாம். அயல்நாடுகளுக்குச் சென்றுவிட்ட தமிழ்ச் சுவடிகள் பல உள்ளன. இலண்டன், மாஸ்கோ, பாரிசு, சிகாகோ முதலிய பெருநரகத்து நூல் நிலைங்களில் தமிழ் ஏடுகள் இருப்பதை அங்கே சென்று கண்டு வந்தவர்கள் குறிப்பிடுகிறனர். பனையோலைகளில் இருந்த நூல்களை அச்சேற்றி வெளியிட அரும் பாடுபட்ட அறிஞர் பெருமக்கள் பலராவர். அவர்கள் உழைப்பும், முயற்சியும் இன்று நம் கற்பனைக்கும் எட்டாதவை. அவர்களுக்கு ஏற்பட்ட இடையூறுகள் சொல்லில் அடங்காதவை. |