பக்கம் எண் :

உரையாசிரியர்கள்706

பதினேழாம் நூற்றாண்டிலிருந்தே தமிழகம் மிக்க கலக்கமடைந்த நிலையில்
இருந்து வந்தது. நிலையற்ற ஆட்சி, பொறுப்பற்ற தலைவர்கள், கேள்விமுறை
இல்லாத கொடுஞ்செயல்கள். வேற்று இனத்தாரின் சூறாவளிப் போர்முறை,
பிற சமயங்களின் கவர்ச்சியூட்டித் திருப்பும் முயற்சி, ஐரோப்பிய நடையுடை
மொழிகளில் நாட்டம் ஆகியவற்றால் மூன்று நூற்றாண்டுகளாகத் தமிழினம்
அலைக்கழிக்கப் பட்டது. இந்த நிலையில் பனை ஓலைகளில் இருந்த
எத்தனையோ இலக்கண இலக்கிய செல்வங்கள், பேணுவாரின்றித் தவித்தன;
எடுப்பாரும் படிப்பாரும் இன்றி ஏங்கின; கறையானும் பிற பூச்சிகளும்
அரிய தமிழ்ஏடுகளைச் சுவைத்து உண்டு தீர்த்தன. எத்தனையோ ஏடுகள்
நெருப்புக்கு இரையாயின;  கல்வியறிவில்லாத மக்கள் பழைய ஏடுகளை
ஆடிப் பெருக்கில் ஆற்று வெள்ளத்தில் மூழ்க வைத்து மனம் மகிழ்ந்தனர்.

     இத்தனை இடையூறுகளையும் கடந்து வந்து, ஒதுங்கி மறைந்து வாழ்ந்த
பல தமிழ்ஏடுகள், இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வாழ்ந்த
கல்வியாளர்களின் இல்லத்தில் சென்று புகுந்து கொண்டன. அவற்றை
அவர்கள் எளிதில் வெளியே காட்டவி்ல்லை.

     தமிழ் இலக்கியச் செல்வங்களை அச்சேற்றி நூல்வடிவில்
கொண்டுவர முயன்ற தமிழ்த் தொண்டர்களுக்கும் பழைய ஏடுகள் எளிதில்
கிடைக்கவில்லை. தம்மிடம் இருப்பவை அரிய ஏடுகள் என்றும், அவை
ஒப்பற்ற செல்வங்கள் என்றும் அறிந்தபோது, ஏடுகள் வைத்திருந்தோர்
தமிழ்த் தொண்டர்களுக்கு அவற்றைக் கொடுக்கத் தயங்கினர்.

     இத்தகைய சூழ்நிலையில் பழைய நூல்களை அச்சிட முயன்ற
பெரியவர்களின் நிலை எவ்வாறு இருந்திருக்கும்! அவர்கள், பழந்தமிழ்
ஏடுகளைத் தேடியவண்ணம் நாடு நாடாக ஊர் ஊராக - வீடு வீடாக
அலைந்து திரிந்தனர். ஏடுகள் கிடைத்த இடத்திலேயே அவற்றைப் பார்த்து
எழுதிக் கொண்டு வந்தனர்.

     ஏடு தேடி, பழைய நூல்களை அச்சிட முயன்ற பெரியவர்களில்
ஈழநாட்டுத் தமிழ்ப் பெரியவர் சி.வை. தாமோதரம் பிள்ளை, ஆறுமுக
நாவலர், டாக்டர் உ.வே.சாமிநாதையர், ரா. இராகவ ஐயங்கார், பின்னத்தூர்
அ.நாராயண சாமி ஐயர், சௌரிப் பெருமாள் அரங்கனார், பவானந்தம்
பிள்ளை, எஸ். வையாபுரிப் பிள்ளை ஆகியோர் தமிழ் மக்களின் நெஞ்சத்தில்
என்றும் இடம்பெறத் தக்கவர்கள்.