மேற்கோள் என்று அறியவும் இயலாது; எல்லாம் ஒன்றாகவே எழுதப்பட்டிருக்கும்”. இவற்றோடு ஏடுகள் அவிழ்ந்து முறை பிறழ்ந்து முன் பின்னாக மாறி, அமைந்தும் இருந்தன. முழுதும் எழுதப்படாமல் அரை குறையாகக் கிடைத்த ஏடுகளும் இருந்தன. நூலின் ஏதேனும் ஒரு பகுதி எழுதப்பட்ட ஏடுகளும் இருந்தன. கரத்தைக் கவியரசு ஆர். வேங்கடாசலம் பிள்ளை தெய்வச்சிலையார் உரையில் பதிப்புரையில், ஏடுகளைப் பற்றிய தம் அனுபவத்தைக் குறிப்பிட்டுள்ளார். அவற்றைக் கீழே காணலாம். “சில ஏடுகள் முழுவதும் இன்றியும் சில ஏடுகள் பாதியில் முறிந்தும் சில பொடிந்தும் போய்விட்டமையின் மிகப் பழுதுப்பட்டிருப்பதும்; கற்றறிஞர் எவராலும் எழுதப்பெறாது கூலிக்கு எழுதுவோர் எவராலோ எழுதப்பெற்றதால் ணனந, லளழ வேறுபாடுகள் பிறவும் தேறாமையான் எழுந்த எழுத்துப்பிழை சொற்பிழைகளும் ஒருமை பன்மைப் பிறழ்ச்சி முடிவுகள் முதலாய சொற்றொடர்ப் பிழைகளும் மல்கியும், சில இடங்களில் நூற்பா இன்றியும், சில இடங்களில் அவை பிறழ்ந்தும், காணப்பெற்றமையின் பல்லிடங்களில் பொருள் துணிதற்கு இயலாதவாறு இருப்பதும் காணலானேன்”.* இத்தகைய ஏடுகளைக் கொண்டு, அச்சிடத்தொடங்கு முன் செய்ய வேண்டிய பணிகள் பல இருந்தன. அவற்றைப் பதிப்பாசிரியர் கீழுள்ளவாறு கூறுகின்றார்: “பண்டைத்தமிழ் நூல் ஏடுகளை அச்சிடுவது என்பது எளிய வேலையன்று. ஆழ்ந்தகன்ற பயிற்சியும், கூர்ந்து கூர்ந்து செல்லும் மதிநுட்பமும், ஏட்டுச் சுவடியி் பன்னெடுங்காலப் பழக்கமும், சிறந்த பயிற்சியுடையார் துணையும் உடையவரே பண்டைத் தமிழ் நூல் ஏடுகளை அச்சிடற்கு உரியார். இன்னோர் தாமும் தாம் அச்சிடப்புகும் நூலிற்குப் பற்பல ஏடடுப் பிரதிகள் தேடிவைத்துக் கொள்ளல் வேண்டும். அவற்றுள் ஒன்றிரண்டேனும் சிறந்த புலவர் கைப்பட்டனவாய் அன்றிச் சிறந்த பயிற்சியுடையோரால் எழுதப்பெற்றனவாய் இருத்தல் வேண்டும். இவர் தாம் அச்சிட எடுத்துக்கொள்ளும் நூலுரைகளைப் பன்முறை பயின்று அந்நூற்பொருள் முழுவதையும் சிலையெழுத்தெனத் தம் மனத்தகத்தே பதிப்பித்துக்கொண்டு, அப்புணர்ச்சியோடு பண்டைத் தமிழ் இயனூல் செய்யுணூல்களை எல்லாம் ஒவ்வொன்றாகப் பார்த்துப் பார்த்து ஒப்புமைப் பகுதிகள், * தெய்வச்சிலையார் உரை - கரந்தைத் தமிழ்ச் சங்க வெளியீடு (1929) பதிப்புரை - பக்கம் - 9, 10. (1929). |