மேற்கோள் விளக்கங்கள் முதலாயவற்றைத் திரட்டிக் கொள்ளல் வேண்டும். இங்ஙனம் எல்லாம் பண்டை நூற்பதிப்பிற்குச் செயத்தகும் முன்வேலைகள், பின்வேலைகள் பலவாகும்.” பதிப்புக்கலைபற்றி மேலும் விளக்கமாக அறிய விரும்புவோர் டாக்டர் வி.ஐ. சுப்பிரமணியம் எழுதியுள்ள பதிப்புக்கலை என்னும் கட்டுரையைக் கற்கவேண்டும் (சில கட்டுரைகள் 1 (1961) பக்கம் 121-134). இத்தனை இடர்ப்பாடுகளுக்கு இடையே பழைய நூல்களைப் பதிப்பிக்க முன்வருபவர்க்குப் போதிய அளவு பணமில்லாத குறையும் இருந்தது. ஒரு நூலை நல்லமுறையில் அச்சிட்டு வெளியிடப் பெரிய தொகை வேண்டி இருந்தது. பெரிய தொகை செலவிட்டால், அது திரும்பவும் செலவிட்டவர் கைக்குக் கிடைக்குமா என்பது ஐயப்பாடாகவே இருந்தது. நூலை அச்சிட்டு மொத்தமாக வைத்துக்கொண்டு போற்றி, ஆண்டுதோறும் சிறுகச்சிறுக விற்று, பணம் சேர்ப்பது எளிய செயலன்று. ஆங்கிலமொழி நாடெங்கும் திருவோலக்கம் கொண்டிருந்த காலத்தில் பழந்தமிழ் நூல்களை ஆர்வத்தோடு வாங்கிப் பயில்வோர் குறைவாகவே இருந்தனர். தமிழறிந்த புலவர்கள் சிலர், பதிப்பாசிரியர்களைக் கண்ணோட்டமின்றி, குறைகூறி வந்தனர்; பதிப்பித்த நூலில் காணும் சில குறைகளை மிகுதிப்படுத்திக் காட்டினார்; மறுப்பு எழுதினர்; கண்டித்தனர். பதிப்பாசிரியர்கள் இத்தகைய சூழ்நிலையில், வாழ்ந்து கொண்டு, கருமமே கண்ணாய் இருந்து, துன்பம் உறவரினும் செய்க துணிவாற்றி இன்பம் பயக்கும் வினை என்ற மணிமொழிக்கு எடுத்துக்காட்டாய்ப் பல நூல்களை வெளியிட்டனர். இத்தகைய பெரியவர்கள் இம் முயற்சியில் அக் காலத்தில் ஈடுபடவில்லை என்றால் மறைந்துபோன தமிழ் நூல்களின் பட்டியல் மிகவும் நீண்டிருக்கும். பதிப்பாசிரியர்கள், தாம் பழைய ஏடுகளில் கண்டவற்றை எல்லாம் அப்படியே பார்த்து எழுதி வெளியிடவில்லை. ஒரு பாட்டின் அல்லது உரைப்பகுதியின் பொருளை நன்கு அறிந்த பின்னரே, தெளிவுபெற்ற பின்னரே தம் பணி முற்றுப் பெற்றதாக எண்ணினர்;தமக்கு விளங்காதவற்றை விளங்காதவை என்று குறிக்கத் தவறவில்லை. ‘நாள் செய்வதை நல்லோர் செய்யார்’ என்று எண்ணி, ‘காலம் கனியட்டும், கருத்து விளங்கட்டும், பொருள் தெரியட்டும்’ என்று பல நாட்கள் காத்திருந்தனர். |