தம்மினும் கற்றறிந்த பெரியோர்களின் உதவியைப் பெறவும் அவர்கள் தயங்கவில்லை. தொல்காப்பியம் பதிப்பித்த சி.வை. தாமோதரம் பி்ள்ளை தொல்காப்பிய பதிப்புரையில், “விடியல் வெங்கதிரகாயும் வெயமல கறை என்னும் வாக்கியத்தையும், ஒரு பரிபாடற் செய்யுளையும் சரியாய்ப் பார்த்துணர்தற்கு எத்தனை பெயரிடங்கொண்டு திரிந்தேன்! எத்தனை வித்துவான்களுக்குக் கடிதம் எழுதிக் கைசலித்தேன்!” என்று குறிப்பிட்டுள்ளார். புள்ளி படுத்தும்பாடு பழைய ஏடுகளில் எழுத்துக்குப் புள்ளியிடும் வழக்கம் இல்லை. நெடில் எழுத்தின்பின் சேரும்காலுக்கும் (இடையின) ரகரத்திற்கும் வேறுபாடு இல்லாமல் எழுதப்பட்டன. இதனால் ஏற்பட்ட குழப்பம் பிழையும் மிகுதி. தமிழ்ப் பெரியார் செல்வக் கேசவராய முதலியார், தமிழ் என்ற நூலில், “(சூடாமணி நிகண்டு நூலை இயற்றிய) மண்டல புருஷரோ தேனீ எனப் பொருள்படுவதான சரகம் என்கிற வடசொல்லைச் சாகம் எனக்கொண்டு,‘ சாகம் சாகினி வெள்ளாடு தேக்கெனும் தருவுதேனீ எனத் தமது சூடாமணி நிகண்டில் பாடிவிட்டனர்” என்று கூறுகின்றார் (தமிழ் (1931) பக்கம் 39). இந்தப் பிழையான சொல் பின்னர் இலக்கியத்தில் புகுந்து விட்டது. கச்சியப்ப முனிவர் தாம் இயற்றிய ‘வண்டு விடுதூது’ என்னும் சிற்றிலக்கியத்தில் இச் சொல்லை ஆண்டு விட்டார். புள்ளி இல்லாததால் ஏற்பட்ட குழப்பங்களை இனிக் காண்போம். “பன்றி முள் எனப் பொருள்படும் சலலம் என்கிற வடசொல்லை மண்டல புருஷர் சல்லம் என நிகண்டில் வழங்கி விட்டார்” (தமிழ் (1931) பக்கம் 39). குறுந்தொகைப் பாட்டு ஒன்றில் வரும் ‘புனறரு பசுங்காய்’ (புனல் தரு பசுங்காய்) என்ற தொடரைப் ‘புன்றரு பசுங்காய்’ என்று படித்துவிட்டுப் பொருள் விளங்காமல் குழம்பிக் கிடந்து பின், விளக்கம் பெற்றனர். நண்டு என்ற பொருளில் கள்வன், களவன் என்ற இரு சொற்களும் சங்க இலக்கிய அச்சு நூல்களில் இடம் பெறுகின்றன. கள்வன் என்பது சரியா? களவன் என்பது சரியா? இக் குழப்பம் ஒரே ஒரு புள்ளியால் வந்துவிட்டது. இதைப்பற்றி ஆராய்ச்சி |