பக்கம் எண் :

711நோக்கு

அறிஞர் ஒளவை. சு. துரைச்சாமிப் பிள்ளை பின்வருமாறு கூறுகின்றார்.

     “கள்வன் என்பது களவன் எனவும் வழங்கும்
      புள்ளிக் களவன் புனல்சேர் பொதுக்கம் போல்

                                        (கலி - 88)

எனவும்,

     அலவ னன்னி குளிர்ஞெண் டார்மதி
     களவன் என்றிவை கற்கடகப் பெயரே

எனத் திவாகரத்தும் சான்றோர் கூறுதல் காண்க. ஐங்குறு நூற்று அச்சுப்
பிரதியினும் களவன் எனப்பாட வேறுபாடு காட்டப் பெற்றுள்ளது.
அகநானூற்று அச்சுப் பிரதியும் ‘கள்வன் மண்ணளைச் செறிய’ (அகம் - 235)
என்று பாடங்கொண்டு களவன் என்பதனைப் பாட வேறுபாடாகக் காட்டிற்று”
(ஐங்குறு நூறு உரை I, பக்கம் 73 (1957).

     காமத்துப்பாலில், “பதிமருண்டு பைதல் உழக்கும்” என்னும் குறள்
உரையில், பரிமேலழகர் பிறர் உரையாக ஒரு கருத்தைக் காட்டுகின்றார்.
அப்பகுதி பல பதிப்புகளில் பலவாறாக உள்ளது.

     “மாலை மயங்கி வரும் போழ்தென மதி நிலை கலங்கி நோயுழக்கும்
என்று உரைப்பாருமுளர்” என்று சில பதிப்பிலும், “வரும் போழ் தென்மதி
நிலைகலங்கி” என்று சில பதிப்பிலும் வெளியிட்டனர். ஒரு புள்ளி படுத்திய
பாட்டை விரிவாக ஆராய்ந்து நல்ல பாடத்தை அறிஞர் ந.மு. வேங்கடசாமி
நாட்டார் காட்டியுள்ளார்.

     சிலப்பதிகார முதற்பதிப்பில் ‘என’ என்று கொண்ட ஆசிரியப்பாக்களின்
இறுதியசையை ‘என்’ என்று மறுபதிப்பில் திருத்தினார் டாக்டர் உ.வே.சா.

     பதிப்பாசிரியர்கள், நூலாசிரியரின் பெயர் முதலியன தெரியாமல்
தவித்ததும் உண்டு. யாருடைய உரை என்ற அறியாமல் தடுமாறியதும் உண்டு.

     தொல்காப்பியப் பொருளதிகாரத்தின் பின் நான்கு இயல்களுக்குப்
பேராசிரியர் எழுதியுள்ள உரையைத் தொடக்கத்தில் நச்சினார்க்கினியர்
உரை என்று கருதி அவர் உரை என்றே வெளியிட்டனர். பின்னர் ரா.
இராகவையங்கார் அவ்வுரை பேராசிரியர் உரையே என்பதை, செந்தமிழ்
இதழ் வாயிலாகத் (தொகுதி 1, 2) தக்க காரணங்கள் காட்டி உணர்த்தினார்.