பக்கம் எண் :

உரையாசிரியர்கள்712

     தெய்வச்சிலையார் (தொல், சொல்) உரையை முதலில் பேராசிரியர்
உரை என்றே கருதி, கரந்தைத் தமிழ்ச்சங்கம் அந்நூலைப் பற்றிய
விளம்பரங்களில் குறித்தது. பின்னரே அவ்வுரை தெய்வச்சிலையார் உரை
என்பது தெளிவாயிற்று. 1

    திருக்கோவையாருக்குப் பேராசிரியர் எழுதிய உரையையும்,
கல்லாடத்திற்கு மயிலேறும் பெருமாள் பிள்ளை இயற்றிய உரையையும் பல
ஆண்டுகளாக நச்சினார்க்கினியர் உரை என்றே கருதினர். பதினெண்
கீழ்க்கணக்கு நூல்கள் சிலவற்றின் பழையவுரைகளை அவர் உரை என்றே
பதிப்பித்து விட்டனர்.

     டாக்டர் உ.வே.சா. “ஒரு நூலுக்குப் பல உரைகள் இருக்கின்றன.
உரையாசிரியர்கள் இன்னாரென்று விளங்குவதில்லை; ஆகையால்
பதிப்பித்தவர்கள் அவ்வுரைகளைத் தம் பெயரால் பதிப்பிடுவது வழக்கமாக
இருந்தது” என்று கூறுகின்றார்கள்.2

      “உரைகளில் மேற்கோளாக வரும் பாடல்கள் எந்த நூலைச்
சேர்ந்தவை என்று தெரியாமல் இருந்ததும் உண்டு. உரைகளில் வரும்
அரிய சொற்றொடர், பழமொழி மேற்கோள் கதை ஆகியவற்றைத் தெரிந்து
கொள்ள முயன்று அலைந்த வரலாற்றைப் பதிப்பாசிரியர்கள் ஆங்காங்கு 
குறிப்பிட்டுள்ளனர். ‘ஒரு பிடி அரிசிக்காக ஒரு குறுணி உமியையும் புடைத்து
எடுக்கும் ஏழைப் பெண்போல், ஒரு சிறிய கருத்து விளக்கத்திற்காகப் பலர்
கூறும் பொருத்தமற்ற செய்திகளையும் பொறுமையாகக் கேட்க வேண்டும்”
என்று டாக்டர் உ.வே.சா. கூறுவதுண்டாம்.

பதிப்பாசிரியர்கள் செய்த மாறுதல்கள்

    பழைய நூல்களை அச்சேற்றிய பதிப்பாசிரியர்கள் நல்ல மாறுதல்கள்
சிலவற்றையும் செய்தனர். பரிமேலழகர் உரை திருக்குறளுக்குப்
பொழிப்புரையாகவே ஏடடில் இருந்தது. அதனைப் பதிப்பித்தோர்
பதவுரையாக மாற்றிப் பதிப்பித்தனர். கலித்தொகையைப் பதிப்பித்த
சி.வை. தாமோதரம் பிள்ளை சில மாறுதல்களைச் செய்தார். கலிப்
பாடல்களின் கொளுச் சொல், ஏடுகளில் பாட்டிற்குமுன் இருந்தது.
அதை அவர் பாட்டிற்குக் கீழே அமைத்தார். பாட்டு முழுவதும் ஒருங்கு
தொடர்ந்து அமையாமல் ஏதேனும் ஒரு முடிவுரையில் பாட்டின் ஒரு
பகுதியும் உரையுமாக இருந்தது. இடையிடையே அற்று அற்று உரைகளின்
நடுவே இருந்த பாட்டைத் திரட்டி முழுவடிவில்


1. தெய்வச் சிலையார் உரை - பதிப்புரை பக்கம் - 10 (1929)

2. சங்கத் தமிழும் பிற்காலத் தமிழும் (1953) பக்கம் - 176.