பக்கம் எண் :

715நோக்கு

குறிப்பிட்டார். கலித்தொகை, சூளாமணி, தொல்காப்பியம் ஆகிய நூல்களி்ன்
முன்னுரைகளில் பல அரிய செய்திகளைக் காணலாம்.

     உ.வே. சாமிநாத ஐயர் தமக்குக் கிடைத்த பலவேறு பாடங்களை
அப்படியே அடிக்குறிப்பில் தந்தார். சிறந்தது என்று கருதிய பாடத்தை
மேற்கொண்டார். அடிக்குறிப்பில் சிறந்த கருத்துக்களைத் திரட்டித் தந்தார்.
ஆராய்ச்சி முன்னுரை எழுதினார். ஏட்டுச் சுவடிகளின் நிலை, நூல் வரலாறு,
ஆசிரியர் பற்றிய விளக்கம் ஆகியவற்றை நன்கு விளக்கினார்.

     இவர்கள் பதிப்புத்தொண்டை விரிவாகக் காண்போம்.

ஆறுமுகநாவலர் (1822 - 1879)

    யாழ்ப்பாணத்து நல்லூரில் பத்தொன்பதாம் நூற்றாண்டில் தோன்றிய
ஆறுமுக நாவலர் செந்தமிழ்ப் பயிர் வளர்க்கும் சிறந்த ஆசிரியராய் -
சைவ சமயத்தின் காவலராய் - பழைய நூல்களுக்கு உரை எழுதும் நல்ல
உரையாசிரியராய் - உரைநடை நூல் வரையும் வித்தகராய் விளங்கியதோடு
சிறந்த பதிப்பாசிரியராகவும் தொண்டாற்றினார்.

     இவர் பதிப்பித்த உரை நூல்களின் பெயர்கள் கீழே தரப்படுகின்றன.

     1. இலக்கணக் கொத்து (உரை)

     2. தொல்காப்பியப் பாயிர விருத்தி

     3. பிரயோக விவேகம் (உரை)

     4. இலக்கண விளக்கச் சூறாவளி

     5. சேனாவரையம்

     6. திருக்கோவையார் (உரை)

     7. திருக்குறள் - பரிமேலழகர் உரை

     ஆறுமுக நாவலரின் பதிப்பு நலங்கள் முன்னரே கூறப்பட்டன.

சி.வை. தாமோதரம் பிள்ளை (1832-1901)

     “படிப்பாரும் எழுதுவாரும் இன்றிப் பாண வாய்ப்பட்டும், தேடுவாரும்
இன்றிச் செல்லுக்கு இரையாகியும் காலாந்தரத்தில் ஒன்றொன்றாய்
அழிந்தும்போம் பழைய தமிழ் நூல்களை இயன்ற மட்டும் அச்சிட்டு
நிலைநிறுத்தத் தொடங்கிய”வர்களில் சி.வை. தாமோதரம் பிள்ளை ஒருவர்.
ஏடு தேடிப் பதிப்பிக்கும் பணியில் ஈடுபட்ட இவர், “என் சிறு பிராயத்தில்
என் தந்தையார் எனக்குக் கற்பித்த சில நூல்கள் இப்போது தமிழ்
நாடெங்கும் தேடியும்