அகப்படவில்லை. ஒட்டித் தப்பி இருக்கும் புத்தங்களும் கெட்டுச் சிதைந்து கிடக்கும் நிலைமையைத் தொட்டுப் பார்த்தவர்க்கன்றோ தெரியவரும்!” என்று வருந்தி எழுதுகின்றார். இவர் தமிழுக்குச் செய்துள்ள தொண்டு யாவராலும் பாராட்டப்பெறும் சிறப்புடையது. பரிதிமாற் கலைஞர் இப் பெரியாரை, ‘தாமோதரம்பிள்ளை சால்பெடுத்துச் சாற்ற எவர் தாமோ தரமுடையோர்?’ என்று புகழ்ந்து கூறுகின்றார். இவர் பதிப்பித்த நூல்களில் முன்னுரைகளிலும் இவருடைய ஆராய்ச்சித்திறனைக் காணலாம்; திட்ப நுட்பமும், உவமை முதலிய அணி நலன்களும் நகைச்சுவையும் இனிமையும் பொருந்திய உரைநடைத் திறனைக் காணலாம்; தமிழ் மொழி மீது இவர் கொண்ட தணியாக் காதலைக் காணலாம்; தமிழ்த் தொண்டில் இவர்க்குள்ள ஈடுபாட்டைக் காணலாம். பல ஏடுகளைத் திரட்டி ஒப்புநோக்கி, மிக முயன்று ஆராய்ந்து இவர் பதிப்பித்த உரைநூல்கள் பின்வருபவையாகும். 1. நீதிநெறிவிளக்கவுரை 2. வீரசோழியம் (1881) 3. தொல்காப்பியப் பொருளதிகாரம் (1885) 4. கலித்தொகை (1887) 5. இலக்கணவிளக்கம் 6. சேனாவரையம் (1889) 7. தொல் எழுத்து, நச்சினார்க்கினியம் (1890) 8. இறையனார் அகப்பொருள் உரை (1893) இவ்வுரை நூல்களை இவரே முதன்முதலில் பதிப்பித்தவர். டாக்டர் உ.வே. சாமிநாத ஐயர் (1855-1942) பழந்தமிழ் நூல்களைப் பதிப்பித்து வெளியிடும் பணியில் தம் வாழ்நாட்களைக் கழித்துவிட்ட பெரியவர் இவர்.* புதுமைக் கவிஞர் பாரதியார் இவரை, பொதியமலைப் பிறந்தமொழி வாழ்வறியும் காலமெல்லாம் புலவோர் வாயில் துதியறிவாய் அவர்நெஞ்சின் வாழ்த்தறிவாய் இறப்பின்றித் துலங்கு வாயே என்று வாயாரப் புகழ்கின்றார். * பார்க்க பிற்சேர்க்கை - 8. |