சீவகசிந்தாமணி, சிலப்பதிகாரம், மணிமேகலை, குறுந்தொகை ஆகிய நூல்களை இவருக்கு முன்னரே தமிழறிஞர்கள் பதிப்பித்து வெளியிட்டுள்ளனர். சீவகசிந்தாமணியை 1868-ஆம் ஆண்டு நாமகள் இலம்பகம் மட்டும், எச். பவர் (Rev. H.Bower) ஆங்கில விளக்கத்துடன் வெளியிட்டார். ப. ரங்கசாமிப் பிள்ளை 1883-ஆம் ஆண்டில் பதுமையார் இலம்பகம் வரை வெளியிட்டார். டாக்டர் ஐயர் 1888-ஆம் ஆண்டில் நச்சினார்க்கினியர் உரையுடன் சீவகசிந்தாமணியைத் திருத்தமாக வெளியிட்டார். சிந்தாமணியை வெளியிடுமாறு டாக்டர் ஐயரைத் தூண்டியவர் சேலத்தில் வாழ்ந்த இராமசாமி முதலியார். அப் பெரியவர் இறந்துபோன செய்தியைக் கேட்டபோது தம் நெஞ்சத்தில் தோன்றிய எண்ண அலைகளைப் பின்வருமாறு டாக்டர் ஐயர் தம் வாழ்க்கை வரலாற்றில் எழுத்து வடிவில் தருகின்றார். “1892-ஆம் வருஷம் மார்ச்சு மாதம் இரண்டாம் தேதி அவர் (இராமசாமி முதலியார்) உலக வாழ்வை நீத்தார். அந்தத் துக்கச் செய்தியைக் கேட்டு நான் துடித்துப்போனேன். அவருடைய பழக்கம் எனக்கு ஏற்பட்டதையும் அதனால் பழந்தமிழ் நூலாராய்ச்சியிலே நான் புகும்படி நேர்ந்ததையும் எண்ணிப் பார்த்தேன். அவருடைய தூண்டுதல் இல்லாவிட்டால் சிந்தாமணியை நான் அச்சிடுவது எங்கே? சங்க நூல்களின் பெருமையை உணர்ந்து இன்புற்று வெளிப்படுத்தும் முயற்சிக்கும் எனக்கும் என்ன சம்பந்தம்?” சீவகசிந்தாமணியை நன்கு பதிப்பித்துத் தேர்ச்சி பெற்ற பின், டாக்டர் ஐயர் பல தமிழ் நூல்களை ஒன்றன்பின் ஒன்றாய் வெளியிட்டார். சிலப்பதிகாரத்தை 1892-ஆம் ஆண்டில் அரும்பதவுரை, அடியார்க்கு நல்லார் உரை ஆகியவற்றுடன் வெளியிட்டார். இவருக்கு முன்னரே 1872-ஆம் ஆண்டில் சோடசாவதானம் சுப்பராய செட்டியாரும், 1876-ல் (புகார்க் காண்டம் மட்டும்) தி.ஈ. ஸ்ரீவாச ராகவாசாரியரும் தாமே உரை எழுதி வெளியிட்டுள்ளனர். மணிமேகலையை ஐயர் 1898-ஆம் ஆண்டில், குறிப்புரையுடன் வெளியிட்டார். ஆனால், அதற்கு முன்னரே மணிமேகலை 1894-ஆம் ஆண்டில் திருமயிலை சண்முகம் பிள்ளையால் வெளியிடப்பட்டது. இவ்வாறு இவருக்கு முன்னே இந்த நூல்களும் பிறரால் வெளியிடப்பட்டிருப்பினும் செவ்வையாகவும் திருத்தமாகவும் |