பதிப்பித்து ஆராய்ச்சிப் பகுதிகளைச் சேர்த்த பெருமை இவருக்கு உண்டு. எட்டுத்தொகை நூல்களுள் நற்றிணை, கலித்தொகை, அகநானூறு தவிர ஏனைய ஐந்து நூல்களைப் பழைய உரைகளுடன் மிகத்திருத்தமாக வெளியிட்டார். பத்துப்பாட்டை நச்சினார்க்கினியர் உரையுடன் பதிப்பித்தார். நன்னூலை, மயிலைநாதர் உரை, சங்கர நமச்சிவாயர் உரை ஆகிய இரு உரைகளுடன் பதிப்பித்தார். இவைகளேயன்றிப் பல சிற்றிலக்கியங்களைப் பதிப்பித்தார். ஆராய்ச்சியாளருக்கு இவரது பதிப்புப் பெரிதும் பயன்படுகிறது. இவர் பதிப்பித்த எல்லா நூல்களின் முன்னும் பின்னும் ஆராய்ச்சிக் குறிப்புகள் நிறைந்திருக்கும்; நூலாசிரியர் உரையாசிரியர் பற்றிய வரலாறுகள் இடம் பெற்றிருக்கும்; உரையில் காட்டப்பட்ட மேற்கோள் நூல்களின் பட்டியல் சேர்ந்திருக்கும்; செய்யுள் அகராதியும் அரும்பத அகராதியும் தரப்பட்டிருக்கும். ஒரு பெரிய தமிழ்ப் பேரவையில் பல புலவர்கள் கூடிப் பல ஆண்டுகள் பொறுமையாக ஆய்ந்து பதிப்பித்திருக்க வேண்டிய பல நூல்களை இவர் ஒருவரே பதிப்பித்துப் பெருந்தொண்டு ஆற்றியுள்ளார். இப் பெரியவர் தமிழ்மொழிக்குச் செய்த அரிய பெரிய தொண்டுகளை நன்றியுணர்ச்சியுடன் நினைத்துப் போற்றி டாக்டர் வ.சுப. மாணிக்கம் பின்வருமாறு புகழ்கின்றார்: பார்காத்தார் ஆயிரம்போர் பசித்தார்க் காகப் பயிர்காத்தார் ஆயிரம்பேர் பாலர்க் காக மார்காத்தர் ஆயிரம்பேர் வாழ்ந்த நாட்டின் மானங்காத்த தமிழ்த்தாய்என் உடைமை எல்லாம் யார்காத்தார்? எனக்கேட்க ஒருவன் அம்மா யான்காப்பேன் எனஎழுந்தான் சாமிநாதன் நீர்காத்த தமிழகத்தார் நெஞ்சின் உள்ளான் நிலைகாத்த மலைஇமய நெற்றி மேலான்! பிற பதிப்பாசிரியர்கள் (19 - ஆம் நூற்றாண்டு) பழந்தமிழ் நூல்கள் பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்தே அச்சேறி வெளிவந்தன. கி. பி. 1812-ஆம் ஆண்டிலேயே திருக்குறளும் நாலடியாரும் அச்சாகி வெளிவந்தன. பத்தொன்பதாம் நூற்றாண்டில் இருந்த பதிப்பாசிரியர்கள், பதிப்பித்த நூல்கள் ஆண்டு ஆகியவற்றை ஆராய்ச்சி அறிஞர் மயிலை சீனி. வேங்கடசாமி தொகுத்துத் தந்துள்ளார். அவற்றுள் |