பக்கம் எண் :

உரையாசிரியர்கள்720

ரா. இராகவையங்ககார் (1870-1948)

    இவர் வடமொழி, ஆங்கிலம் ஆகிய இருமொழி அறிந்து தமிழ்
மொழியில் வளமான புலமை பெற்ற ஆராய்ச்சியாளர். அகநானூறு
பதிப்பிப்பதில் கோபாலையருக்குப் பெரிதும் உதவிசெய்து பெருமை
பெற்றவர். “டாக்டர் உ.வே. சாமிநாதையரைப் போலவே, இவரும் நமது
பண்டை நூற்கருவூலங்களைத் தேடித் தொகுத்து வைத்தலில் பேரூக்கம்
கொண்டவர். இவர் நூற்பதிப்பு முயற்சியை மேற்கொண்டிருந்தால் அந்த
நெறியிலும் இவர் தலைசிறந்தவராயிருப்பார் என்பதில் ஐயமில்லை.”*

எஸ். வையாபுரிப்பிள்ளை (1891-1956)

    ஆங்கிலமும் தமிழும் வல்ல ஆராய்ச்சி அறிஞர் இவர். பல்வேறு
தமிழ்த்துறைகளில் பணியாற்றிய இப் பெரியவர் கணக்கற்ற ஓசைச்சுவடிகளை
முயன்று தேடித் தொகுத்தார்; நாற்பதுக்கு மேற்பட்ட நூல்களை பதிப்பித்தார்.
களவியற் காரிகை, நவநீதப் பாட்டியல் ஆகிய இரண்டு நூல்களையும் பழைய
உரைகளுடன் - ஆராய்ச்சிக் குறிப்புக்களுடன் திருத்தமாக வெளியிட்டார்.
கப்பலோட்டிய தமிழர் வ.உ.சி. பதிப்பித்த தொல்காப்பியம் இளம்பூரணர்
உரையைப் பதிப்பிக்க இவர் பெரிதும் உதவினார்.

வ.உ. சிதம்பரம் பிள்ளை (1872-1936)

    விடுதலைப் போரட்டத்தில் பெரும் பங்கு கொண்டவர் என்றும்,
கப்பலோட்டிய தமிழர் என்றும். வ.உ.சி. அவர்களை நாடு நன்கு அறியும்.
இவரது தமிழ்த்தொண்டினை அறிந்திருப்பவர் மிகக் குறைவே. இவர்
திருக்குறள் மணக்குடவர் உரை, தொல்காப்பியம் இளம்பூரணர் உரை
ஆகிய இரு உரை நூல்களையும் வெளியிட்டவர்.

கா. நமச்சிவாய முதலியார் (1876-1981)

    வட ஆர்க்காடு மாவட்டம் காவேரிப்பாக்கத்தில், தோன்றி, சிறந்த
தமிழாசிரியராக விளங்கிய இவர், தொல்காப்பியம் பொருளதிகாரம்
இளம்பூரணம், இறையனார் களவியல் உரை, தொல்கப்பியம் சொல்லதிகாரம்
இளம்பூரணம் ஆகியவற்றைத் திருத்தமாய்ப் பதிப்பித்தார்.


 * தமிழ்ச்சுடர் மணிகள் 1949 பக். 200; எஸ். வையாபுரிப்பிள்ளை.