பக்கம் எண் :

உரையாசிரியர்கள்722

விளக்கியுள்ளார். ஆராய்ச்சிக் குறிப்புக்கள் சேர்த்துள்ளார். ‘திருக்குறள் -
உரைவளம்’ பதிப்பித்து அழியாப் புகழை எய்தினார். உரை வளத்தில்
ஒப்பிட்டுநோக்கும் பார்வையை வழங்கியவர் இவரே.

மே. வீ. வேணுகோபாலப் பிள்ளை

    ஆழ்ந்த இலக்கணப் புலமையாளர், பதிப்புக்கலையில் வல்லவர். புலமை
உலகம் மதிக்கும் வகையில் பழைய நூல்களைத் திருத்தமாகப் பதிப்பித்தவர்.
யாப்பருங்கல விருத்தியுரை, யாப்பருங்கலக் காரிகையுரை, இறையனார்
அகப்பொருள் உரை, தொல்காப்பியம் சொல்லதிகாரம் நச்சினார்க்கினியர்
உரை ஆகியவற்றை மிக அழகாகக் குறைபாடு எதுவும் இன்றிப்
பதிப்பித்துள்ளார்.

வேண்டும்!

    தமிழகத்தில் பதிப்புக்கலை இன்னும் வளர்ந்து முழுமை எய்தவில்லை.
பதிப்புக் கலையில்  இன்னும் எத்தனையோ நுணுக்கங்களை அறிந்து போற்ற
வேண்டும். பழைய மூல நூல்களைத் தேடிச் சரியான பாடத்தை உறுதி
செய்தல், அழகான முறையில் அச்சேற்றுதல், அச்சுப்பிழை நேராமல்
கவனித்தல், ஆராய்ச்சி முன்னுரை, அருஞ்சொல் அகராதி, பொருள்
அடைவுப் பட்டியல், ஒப்புமைப் பகுதிகள், பிற பாடங்களைத் தவறாமல்
சேர்த்தல் போன்ற பணிகளை விழிப்போடு செய்தல் வேண்டும்.

     தமிழில் வெளிவரும் அச்சு நூல்களில் உள்ள பிழைகளை நீக்கியாவது
அடுத்து வரும் பதிப்புகள் பாராட்டுப் பெறுதல் வேண்டும். தமிழ்ப் பெரியார்
திரு.வி.க. பதிப்பாளர்களுக்குப் பின்வரும் வேண்டுகோள் விடுவிக்கின்றார்.

     “மேல் நாடுகளில் வெளியிடப்படும் நூல்களில் அச்சுப் பிழை உறுதல்
அரிது. முதற்பதிப்பில் ஒரு வேளை பிழையுற்றாலும் இரண்டாம் பதிப்பில்
அப்பிழைகளைக் களைவதில் வெளியிடுவோர் பெருங்கவலை செலுத்துவர்.
நமது நாட்டில் முதற் பதிப்பில் உறும் பிழைகளைப் பார்க்கிலும் பின்வரும்
பதிப்புக்களில் புதுப்பிழைகள் மலிந்து வருகின்றன. நூல்களை வெளியிடும்
கூட்டத்தார் கவலையீனத்தை என்னென்று கூறுவது? இக்குறை நீக்கித்
தமிழ்ப்பற்றுடையார் ஒருவழிகோலல் ஆகாதா?” 1


 

 1. பட்டினத்தார் பாடல் விருத்தியுரை (1923) முகவுரை பக்கம். 5, 6.