பக்கம் எண் :

உரையாசிரியர்கள்724

பெற்றுள்ளது. இதனை அறிஞர் பெருமக்கள் ஆராய்ந்து திருத்த வேண்டும்.

     உயிரியலில் “பேஎ நாம்” என்ற சூத்திரத்திற்குத் தெய்வச்சிலையார்
எழுதிய விளக்கத்தின் அடிக்குறிப்பில் கரந்தைத் தமிழ்ச் சங்கப் பதிப்பில்
பின்வரும் செய்தி சேர்க்கப்பட்டுள்ளது.

     “நாம நல்லார் எனப்பல உரைகளுள்ளும் காணப்படும் இதனைப்
பண்டித திரு.அ. கோபாலையர் அவர்கள் அருள் கூர்ந்து ஆய்ந்து
‘நாமநல்லரா’ என இருத்தல் வேண்டும் என்றனர். இதுவும் பொருத்தம்
உடையதே.”

     ஆனால், சாலவும் பொருத்தமுடைய இத் திருத்தம் இன்னும் பலரால்
ஏற்று கொள்ளப்படாமல், நாமநல்லார் என்றே அச்சிடப்பட்டு வருவது
வருந்தத் தக்கதாகும்.

     பண்டிதமணி மு. கதிரேசன் செட்டியார், பலகாலும் போற்றிப் பயின்று
வந்த தொல்காப்பியம் பொருளதிகார நச்சினார்க்கினியர் உரை நூலில் -
பொருளியலில் - உடனுறை உவமம் என்னும் சூத்திரவுரையில் (பொருளியல்
- 48) “இறைச்சி தானே (229), இறைச்சியிற் பிறக்கும் (230) என்பனவற்றுள்
இறைச்சிக்குக் காரணம் காட்டினாம்” என்றும், “அன்புறு தகுந (231)
என்பதனுள் ஏனையதற்குக் காரணம் காட்டினாம்” என்றும் வரும் உரைப்
பகுதிகள் பொருத்தமின்மை கருதித் திருத்தியுள்ளார். இறைச்சிக்குக் காரணம்
என்பதை இறைச்சிக்கு உதாரணம் என்றும்; ஏனையதற்குக் காரணம்
என்பதை ஏனையதற்கு உதாரணம் என்றும் திருத்தியுள்ளார். எவ்வளவு
அருமையான திருத்தங்கள் இவை !

     அண்ணாமலைப் பல்கலைக்கழத்தில் பல ஆண்டுகள் தமிழ்ப்பணி
புரிந்த வித்துவான் திரு.மு. அருணாசலம் பிள்ளை அச்சு நூல்களில்
செய்யவேண்டிய திருத்தங்கள் பலவற்றைக் குறிப்பிட்டுள்ளார். அவைபற்றி
அவர் எழுதிய கட்டுரைகள் சில .உண்டு.

     இளம்பூரணர் பொருளதிகார உரையில் திருத்தம் அடைய வேண்டிய
பகுதிகள் பல உண்டு என்பது அவர் கருத்து. இளம்பூரணர் உரையில்
செய்யுள் இயலில், தொகை வகை பற்றிய விளக்கம் வருகின்றது.
அக்கணக்குப் பற்றியும் இளம்பூரணர் உரையில் செய்யவேண்டிய திருத்தம்
பற்றியும் அரிய கட்டுரை ஒன்றினை அவர் எழுதியுள்ளார்.*


 * 1008ஆவது நூல் வெளியீட்டு விழாமலர் (கழக வெளியீடு 1961)
   தொல்காப்பியத்தில் ஒரு சூத்திரம் - மு. அருணாசலம் பிள்ளை.