பக்கம் எண் :

725நோக்கு

     மேலும், அவர் பொருளதிகார உவமையியலில் பேராசிரியர் உரையில்
செய்யவேண்டிய மாறுதல்களைப் பற்றிச் செந்தமிழ்ச் செல்வியில் (தொகுதி -
23) இரு கட்டுரைகள் எழுதியுள்ளார்.

     பல அரிய நூல்களை மிகத் திருத்தமாக வெளியிட்ட டாக்டர் உ.வே.சா.
அவர்களின் சிந்தாமணிப் பதிப்பிலும் திருத்தமடைய வேண்டிய பகுதிகள்
உள்ளன என்பதை எஸ். வையாபுரிப் பிள்ளை கூறுகின்றார்.

     “இவர் (உ.வே.சா.) பதிப்பில் திருத்தவேண்டிய இடங்கள் இல்லையென
நினைப்பதும் தவறு. சீவக சிந்தாமணியில் நான்கு பதிப்புக்கள் வெளிவந்து
விட்டன; என்றாலும் பல இடங்கள் திருத்தம் பெற வேண்டியனவாக உள்ளன.
சைவ சமாசப் பதிப்பின் முன்னுரையில் (1941) என்னால் காட்டப்பட்டுள்ளன.
உதாரணத்தின் பொருட்டு இங்கே வேறு சில காட்டுகி்றோன்”* என்று கூறிப்
பல திருத்தங்களை (நச்சினார்க்கினியர் உரையிலும் மூலத்திலுமாக) எடுத்துக்
காட்டியுள்ளார்கள்.

     சிந்தாமணி மூலத்தில் செய்யவேண்டிய வேறு சில திருத்தங்களை
மு. அருணாசலம் பிள்ளை செந்தமிழ் இதழ்களில் வெளியிட்டுள்ளார்.

     இன்னும் பலவகை திருத்தங்களை அறிஞர் பெருமக்கள்
அறிந்திருக்கக்கூடும். அவற்றை எல்லாம் தொகுத்து ஆராய்ந்து புதிய
பதிப்புக்களில் சேர்த்துக் கொள்ளுதல் வேண்டும்.

     பழைய உரைகளில் திருத்தவேண்டிய பகுதிகள் இருப்பது போலவே.
இக்காலத்தார் எழுதும் புதிய உரைகளிலும் பொருத்தமற்ற விளக்கங்கள்
உள்ளன. அவற்றையும் திருத்த வேண்டும்.

     சங்க நூல்களில் வரும் ‘தூங்கும்’ என்ற சொல்லுக்கு உறங்கும் என்று
பொருள் எழுதப்பட்டுள்ளது. எத்தகைய பெரும் பிழை இது !

     குவளை உண் கண் என்பதற்கு ‘ஆளை உண்பதுபோல் பார்க்கும்
குவளை மலர் போன்ற கண்’ என்று எழுதி மரபைச் சிதைக்கின்றனர் !

     சங்க இலக்கியத்தில் வரும் ‘தோன்றி’ என்பதற்குக் காந்தள் என்றே
பொருள் எழுதுகின்றனர். காந்தள் வேறு, தோன்றி வேறு.

    சினைவளர் வேங்கை கணவிரி காந்தள்
    தாய தோன்றி தீயென மலர
                                            (பரி: 11, 20-21)


 * தமிழ்ச்சுடர் மணிகள் (1947) பக்கம் 248, 249.