பக்கம் எண் :

உரையாசிரியர்கள்728

திரண்டு வருகின்றார். தேரோடும் நெடு்ந் தெருவில் வெள்ளித்தேர்
வருகின்றது. அத்தேரில் கூத்தப்பெருமானின் சிலை, கண்கொள்ளாக்
காட்சியாய்ப் பொலிகின்றது. சிலைவழங்கும் கலையழகில் - முகத்தில்
தவழும் மோன எழிலில் - ஆடல் திறத்தில் அடியவர்கள் மூழ்கித் தம்மை
மறக்கின்றனர்.

     அக்காட்சியை காணச் சிற்றூரிலிருந்து தந்தையும் மகனுமாய் இருவர்
வருகின்றனர். பெருங்கூட்டத்தின் நடுவே சிக்கி ஆண்டவனின்
திருக்கோலத்தைக் காண இயலாது அவர்கள் தவிக்கின்றனர். தந்தைக்கு
வெள்ளித்தேரும், கலையழகு வாய்ந்த சிலையும் பாதியளவே தெரிகின்றது.
அந்த நிலையில் அவர் நிறைவு அடைந்து தன் மகனைத் தூக்கித் தம்
தோளின் மீது அமர்த்துகின்றார். தந்தையின் தோள், மகனைச் சுமக்கின்றது.
தந்தையின் தலையைவிட மகனின் தலை இப்போது உயர்ந்து விட்டது.
தந்தைக்கு தெரியாத பல இனியகாட்சிகள் - அழகுக் கோலங்கள் மகனுக்குத்
தெரிகின்றன. மகிழ்ச்சி மிகுதியால் அந்தச் சிறுவன் கூச்சலிடுகிறான். “அப்பா
அதோபார்! இங்கே பார்! இதைப்பார்!” என்கிறான். தந்தை அமைதியாக,
“நீயே பார். உனக்குத் தெரிந்தால் போதும்!” என்கிறார். பின்னர்ச் சிறுவன்
தன் தந்தைக்குக் தெரியாத பல காட்சிகளை, தான் கண்டுவிட்டதாய்
மகிழ்கின்றான். தந்தை அறியாத பலவற்றைத் தான் அறிந்துகொண்டதாய்ப்
பூரிக்கின்றான்; ‘எனக்குத் தெரிபவை என் அப்பாவுக்குத் தெரியவில்லையே!’
என்றும் நினைக்கின்றான்.

     தந்தையின் தோள் மீது இருந்துகொண்டு மகிழும் சிறுவனின்
மனநிலையே ‘உரையாசிரியர்களின் உரைகளைக் கற்று, அவர்களிடம் குறை
காண்பவரிடம் உள்ளது. “நமக்குத் தெரிபவை உரையாசிரியர்களுக்குத்
தெரியவில்லையே!” என்று நினைப்பவர்கள், தாம் உரையாசிரியர்களின்
தோள் மீது இருப்பதை நினைவுபடுத்திக் கொள்ள வேண்டும்.

     உரையாசிரியர்களுக்கு இல்லாத. பலவகை வாய்ப்புகள் இன்றுள்ளவர்க்கு
ஏற்பட்டுள்ளன. ஆதலின் உரையாசிரியர்களுக்குத் தோன்றாத விளக்கமும்,
விளங்காத புதுப்பொருளும் இன்றுள் சிலருக்குத் தோன்றுவதும் விளங்குவதும்
இயல்பானவை. காலம்தரும் புது விளக்கங்களைப் போற்றுதல், பழமையைப்
புறக்கணிப்பதாகாது; உரையாசிரியர்களிடம் குறை காணும் நோக்கம்
உடையதும் அன்று.

     காலம் தந்த அரிய கருத்து விளக்கங்கள் சிலவற்றை இங்கே
காண்போம்.