பக்கம் எண் :

729நோக்கு

எழுதாத உரை

    ஏட்டில் எழுதிவைக்காமல், மன்றங்களில் சொற்பொழி வாற்றியபோதும்,
மாணவர்களுக்குப் பாடம் சொன்னபோதும், அறிஞர்கள் ஒன்றுகூடி
அளவளாவிப் பேசி மகிழ்ந்தபோதும் புலவர்களிடமிருந்து எத்தனையோ
பாடல்களுக்குப் புதிய உரையும் விளக்கமும் தோன்றின. அவை யாவும்
ஏட்டில் எழுதப்படாமையால் காற்றோடு காற்றாய் மறைந்து போயின. சில
உரைகளையும் விளக்கங்களையும் இன்றும் நினைவில் கொண்டு கூறுவோர்
நம்மிடையே வாழ்ந்து வருகின்றனர்.

1

    ந.மு. வேங்கடசாமி நாட்டார் ‘ஈன்று புறந்தருதல்’ என்னும்
புறநானூற்றுப்பாடலை (312) விளக்கியபோது அப்பாடலில் உள்ள
சான்றோன் என்ற சொல்லுக்கு ‘வீரன்’ என்ற பொருள் கூறி, ‘நன்னடை’
என்ற பாடத்தை நீக்கிவிட்டு, அடிக்குறிப்பில் பாடவேறுபாடாகத்
தரப்பட்டுள்ள ‘தண்ணடை’ என்ற பாடத்தைப் பாட்டில் அமைத்துக்
கொண்டு நல்லதொரு விளக்கம் கூறினார் என்று அவருடைய மாணவர்கள்
கூறுகின்றனர். அவர் கருத்தின்படி, அந்தப் புறப்பாட்டு பின்வருமாறு
அமையும்.

    ஈன்றுபுறம் தருதல் என்றலைக் கடனே
    சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே
    வேல்வடித்துக் கொடுத்தல் கொல்லற்குக் கடனே
    தண்ணடை நல்கல் வேந்தற்குக் கடனே
    ஒளிறுவாள் அருஞ்சமம் முருக்கிக்
    களிநெறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே.
                                            - புறம். 312

     இப் பாடலுக்கு அப் பெரியார் கூறிய விளக்கத்தையும் அதன்
சிறப்பையும் காண்போம்.

     1. இப் பாடலின் திணை, வாகை; துறை, மூதின் முல்லை. ‘மூதின
முல்லை‘யைப் புறப்பொருள் வெண்பாமாலை பின்வருமாறு விளக்குகின்றது.

    அடல்வேல் ஆடவர்க்கு அன்றியும் அவ்இல்
    மடவரல் மகளிர்க்கும் மறமிகுத் தன்று.
                                                (8:21)

    மறக்குடியில் பிறந்த ஆண்மக்களுக்கேயன்றி பெண் மக்களுக்கும் வீரம்
உரியது என்று இத்துறை கூறுகின்றது.