மேலே காட்டிய ‘ஈன்று புறம் தருதல்’ என்னும் பாட்டு மறக்குடி மகள் ஒருத்தியின் கூற்றாக அமைந்துள்ளது. “நான் சிறந்த ஆண்மகனைப் பெற்றெடுக்கிறேன்; தந்தை அவனை வீரனாக்கட்டும்; கொல்லன் வேல்வடித்துக் கொடுக்கட்டும்; யான் பெற்ற காளை போரில் புகுந்து யானையைக் கொன்று வீழ்த்தட்டும்; மன்னன் அவனுக்கு வளமான வயல்களைத் தரட்டும்!” என்று அவள், தான் தோன்றிய வீரக்குடிக்க ஏற்பக் கூறுகின்றாள். இவ்வாறு பொருள் கொள்ளும்போது, துறைக்கு ஏற்ற பாடாக அது விளங்குகிறது. 2. சான்றோன் ஆக்குதல்: சான்றோன் என்ற சொல்லுக்குப் போர்வீரன் என்ற பொருள் உண்டு. புறநானூற்றுக்குக் குறிப்புரை எழுதிய டாக்டர் உ.வே.சா. ‘சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே’ என்ற அடிக்கு, “தன் குலத்துக்குரிய படைக்கலப் பயிற்சியாகிய, கல்வி, அதற்குரிய அறிவு, அதற்குரிய செய்கைகள் ஆகிய இவற்றால் நிறைந்தவனாகச் செய்தல் தகப்பனுக்குக் கடமையாம்” என்று எழுதியுள்ளார். பாட்டின் திணை, துறை ஆகிய இரண்டையும் மனத்தில் கொண்டு எழுதிய நல்ல விளக்கம் இது. பதிற்றுப்பத்தில், சான்றோன் என்ற சொல், போர்வீரனைக் குறிக்கும் இடங்கள் பல உள்ளன. நோன்புரித் தடக்கைச் சான்றோர் மெய்ம்மறை - 14:12 ஏந்தெழில் ஆகத்துச் சான்றோர் மெய்ம்மறை - 58:11 சாந்தெழில் மறைத்த சான்றோர் பெருமகன் - 67:18 என்ற இடங்களில் சான்றோர் என்ற சொல் போர் வீரனையே குறிக்கின்றது. எனவே, பாட்டின் திணை துறை இவற்றிற்கேற்ப, சான்றோன் என்ற சொல்லுக்குப் போர்வீரன் என்று பொருள் கொள்வதே பொருத்தமாகும். 3. தண்ணடை நல்கல்: போரில் சிறந்த வெற்றிச் செயல்களைச் செய்த வீரர்களுக்கு மருத நிலங்களைத் (தண்ணடை) தருதல் அக்காலத்தில் வழக்கமாய் இருந்தது. ...பிணங்கு கதிர் அலமரும் கழனித் தண்ணடை ஒழிய இலம்பாடு ஒக்கல் தலைவற்கோர் கரம்பைச் சீறூர் நல்கினன் - புறம்: 285 |